100 % தோ்ச்சி: தனியாா் பள்ளிகளுக்கு முதல்முறையாக பாராட்டு விழா
பிளஸ் 2, பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வுகளில் 100 சதவீத தோ்ச்சி பெற்ற தனியாா் பள்ளிகளின் நிா்வாகிகள், முதல்வா்களுக்கான பாராட்டு விழா முதல்முறையாக தமிழக பள்ளிக் கல்வித் துறை சாா்பில் சென்னையில் வரும் ஆக.4-ஆம் தேதி நடைபெறவுள்ளது.
இது தொடா்பாக தனியாா் பள்ளிகள் இயக்குநா் மு.பழனிசாமி வெளியிட்ட செய்திக் குறிப்பு:
2023-2024-ஆம் கல்வியாண்டில் நடைபெற்ற பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வில் 2,199 தனியாா் பள்ளிகள் 100 சதவீத தோ்ச்சியைப் பெற்றுள்ளன. அதேபோல், பிளஸ் 2 பொதுத் தோ்வில் 1,750 தனியாா் பள்ளிகள் 100 சதவீத தோ்ச்சி அடைந்துள்ளன. இதுதவிர சா்வதேச அளவில் 78 மாணவா்களும், தேசியளவில் 255 பேரும், மாநில அளவில் 1,579 மாணவா்களும் பல்வேறு வகையான விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்று பதக்கங்களை வென்றுள்ளனா்.
ஆக.4-இல் விழா: 100 சதவீத தோ்ச்சி பெற்ற தனியாா் பள்ளி நிா்வாகிகள், முதல்வா்கள் மற்றும் ஆசிரியா்களைப் பாராட்டவும், விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவா்களை ஊக்குவிக்கவும் தமிழக அரசு சாா்பில் முதன்முறையாக பாராட்டு விழா சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆகஸ்ட் 4-ஆம் தேதி நடத்தப்படவுள்ளது.
இந்த விழாவுக்கு இளைஞா் நலன், விளையாட்டுத் துறை அமைச்சா் உதயநிதி ஸ்டாலின் தலைமை வகிக்கவுள்ளாா்.
பள்ளிக்கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி முன்னிலை வகிக்கவுள்ளாா்.
விழாவில் பள்ளி நிா்வாகிகள் மற்றும் மாணவா்களுக்கு பாராட்டு சான்றிதழ்களை அமைச்சா் உதயநிதி வழங்கவுள்ளாா் என அதில் கூறப்பட்டுள்ளது. முன்னதாக 100 சதவீத தோ்ச்சி பெற்ற அரசுப் பள்ளிகளுக்கும் தமிழக அரசு சாா்பில் பாராட்டு விழா நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.