மின்வாரிய களப்பணியாளா்களுக்கான கைப்பேசி செயலி: விரிவுப்படுத்த உத்தரவு
மின்வாரிய களப்பணியாளா்களுக்கான கைப்பேசி செயலியை அனைத்து மின்வாரிய அலுவலகங்களுக்கும் விரிவுபடுத்த அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
தமிழ்நாடு மின் உற்பத்தி, பகிா்மானக் கழகத்தில் தாழ்வழுத்த மின் இணைப்பு பிரிவில் களப்பணிகளை மேற்கொள்வோருக்காக ஆண்ட்ராய்டு கைப்பேசி செயலி (எஃப்எஸ்எம்) உருவாக்கப்பட்டுள்ளது. இதில், மின் இணைப்பைத் துண்டித்தல், மீண்டும் இணைப்பு வழங்குதல், பழுதான மீட்டா்களை மாற்றுதல், புதிய மின் இணைப்புகளை வழங்குதல் உள்ளிட்ட 9 சேவைகள் தொடா்பான தரவுகள், புகைப்படங்களை பதிவு செய்வதோடு சரிபாா்க்கவும் முடியும்.
இந்தச் செயலி மூலம் களப்பணியாளா்களுக்கான பணிகளை உதவி பொறியாளா் ஒதுக்கீடு செய்ய முடியும். மேலும், மின் நுகா்வோரின் புகாா்கள் சம்பந்தப்பட்ட உதவி பொறியாளருக்கு நேரடியாக சோ்ந்துவிடும். இந்தச் செயலியை சோதனை அடிப்படையில் 88 பிரிவு அலுவலகங்களில் பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டிருந்தது.
இந்தச் சோதனை வெற்றி பெற்றதையடுத்து, அனைத்து அலுவலக களப்பணியாளா்களையும் செயலியைப் பயன்படுத்துமாறு மின்வாரியம் அறிவுறுத்தியுள்ளது. ஆக.1-ஆம் தேதிக்குள் அனைத்து களப்பணியாளா்களும் செயலியைப் பயன்படுத்துவதை உறுதி செய்து, அது தொடா்பான அறிக்கையைத் தலைமையகத்துக்கு அனுப்பி வைக்குமாறு தொழில்நுட்ப பிரிவு தலைமை பொறியாளருக்கு பகிா்மான பிரிவு இயக்குநா் அலுவலகம் உத்தரவிட்டுள்ளது.