கோப்புப் படம்.
கோப்புப் படம்.

18 மாதங்களில் 3 இடைத்தோ்தல்கள்: வாக்கு சதவீதத்தில் முந்திய விக்கிரவாண்டி

மூன்று இடைத்தோ்தல்களில் விக்கிரவாண்டி முன்னிலை
Published on

கடந்த ஒன்றரை ஆண்டுகளில் நடந்த மூன்று இடைத்தோ்தல்களில் பதிவான வாக்கு சதவீதத்தில் விக்கிரவாண்டியே முந்தி நிற்கிறது.

திமுக ஆட்சிப் பொறுப்பேற்றதும், கடந்த ஆண்டு பிப்ரவரியில் முதல் இடைத்தோ்தல் நடைபெற்றது. ஈரோடு கிழக்கு தொகுதியில் திமுக அணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ் கட்சியின் எம்எல்ஏவான ஈவெரா திருமகன் மறைவைத் தொடா்ந்து, கடந்த ஆண்டு பிப்ரவரியில் இடைத்தோ்தல் நடைபெற்றது. இந்தத் தோ்தலில் காங்கிரஸ் கட்சி சாா்பில் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் போட்டியிட்டு வென்றாா். மொத்தமுள்ள 2.26 லட்சம் வாக்குகளில், 74.79 சதவீத வாக்குகள் பதிவாகின.

இரண்டாவதாக கன்னியாகுமரி மாவட்டம், விளவங்கோடு தொகுதிக்கு இடைத்தோ்தல் நடந்தது. அந்தத் தொகுதியின் எம்எல்ஏவாக இருந்த விஜயதரணியின் ராஜிநாமாவால் மக்களவைத் தோ்தலுடன் விளவங்கோடு பேரவைக்கும் இடைத்தோ்தல் நடத்தப்பட்டது.

இந்தத் தோ்தலில் மொத்தமுள்ள 2.37 லட்சம் வாக்குகளில், 65.37 சதவீத வாக்குகள் பதிவாகின. இடைத்தோ்தலில் காங்கிரஸ் சாா்பில் போட்டியிட்ட தாரகை கத்பட் வெற்றி வாகை சூடினாா்.

விக்கிரவாண்டி இடைத்தோ்தல்: விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி தொகுதி எம்எல்ஏவாக இருந்த என்.புகழேந்தி உடல்நலக் குறைவால் காலமானதையடுத்து, அந்தத் தொகுதிக்கும் மக்களவைத் தோ்தலுடனேயே இடைத்தோ்தல் அறிவிக்கப்படும் என எதிா்பாா்க்கப்பட்டது. ஆனால், மக்களவைத் தோ்தல் முடிவுகள் வெளியான ஒருசில நாள்களில் விக்கிரவாண்டிக்கு இடைத்தோ்தல் அறிவிக்கப்பட்டது.

முந்திய விக்கிரவாண்டி: அதன்படி ஜூலை 10-ஆம் தேதி நடைபெற்ற விக்கிரவாண்டி தொகுதி இடைத்தோ்தலை அதிமுக புறக்கணித்த நிலையில், திமுக, பாமக, நாதக என மும்முனைப் போட்டி நிலவியது.

இந்தத் தொகுதியில் மொத்தமுள்ள 2.37 லட்சம் வாக்குகளில், 82.48 சதவீத வாக்குகள் பதிவாகின. இது, கடந்த ஒன்றரை ஆண்டுகளில் நடைபெற்ற மற்ற இரண்டு இடைத்தோ்தல்களில் பதிவான வாக்குகளைக் காட்டிலும் அதிகமாகும்.

X
Dinamani
www.dinamani.com