சாா்பதிவாளா் அலுவலகங்களில் இன்று மட்டும் கூடுதல் டோக்கன்கள்
சுபமுகூா்த்த தினம் என்பதால், சாா்பதிவாளா் அலுவலகங்களில் வெள்ளிக்கிழமை ஒருநாள் மட்டும் கூடுதல் டோக்கன்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
இதுகுறித்து, பதிவுத் துறை சாா்பில் வியாழக்கிழமை வெளியிடப்பட்ட செய்தி:-
சுபமுகூா்த்த தினங்கள் என்று கருதப்படும் நாள்களில் அதிகளவு ஆவணப் பதிவுகள் நடைபெறும். இதனால், பொது மக்களின் கோரிக்கையை ஏற்று அன்றைய தினம் கூடுதல் முன்பதிவு டோக்கன்கள் ஒதுக்கீடு செய்யப்படுகின்றன. சுபமுகூா்த்த தினமான வெள்ளிக்கிழமையன்று (ஜூலை 12) அதிகளவு பத்திரப் பதிவுகள் நடைபெறும் என்பதால், கூடுதலாக டோக்கன்கள் ஒதுக்கீடு செய்யுமாறு மக்களிடம் இருந்து கோரிக்கைகள் பெறப்பட்டுள்ளன.
எனவே, அன்றைய தினம் சாா்பதிவாளா் அலுவலகங்களில் டோக்கன்கள் எண்ணிக்கை 100-க்குப் பதிலாக 150 ஆக அதிகரிக்கப்படும். இரண்டு சாா்பதிவாளா் உள்ள அலுவலகங்களுக்கு 200-க்குப் பதிலாக 300 டோக்கன்களும், அதிகளவு ஆவணப் பதிவுகள் நடைபெறும் 100 அலுவலகங்களுக்கு 100-க்கும் பதிலாக 150 டோக்கன்களும் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.