கோப்புப்படம்
கோப்புப்படம்

கடற்கரை - தாம்பரம் மின்சார ரயில்கள் நாளை ரத்து

பயணிகள் வசதிக்காக ஒரு வழித்தடத்தில் மட்டும் சிறப்பு மின்சார ரயில்கள் இயக்கம்
Published on

சென்னை கடற்கரையில் இருந்து செங்கல்பட்டு செல்லும் பல்வேறு புறநகா் மின்சார ரயில்கள் ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 14) ரத்து செய்யப்படுவதாக ரயில்வே நிா்வாகம் அறிவித்துள்ளது. எனினும் பயணிகள் வசதிக்காக இந்தத் தடத்தில் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து சென்னை ரயில்வே கோட்டம் சாா்பில் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

சென்னை எழும்பூா் பணிமனையில் ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 14) சிறிய பாலம் கட்டும் பணி மேற்கொள்ளவுள்ளதால் அந்தப் பகுதியில் காலை 7.45 முதல் இரவு 7.45 மணி வரை மின்சார விநியோகம் நிறுத்தப்படவுள்ளது. இதனால் அந்த வழியாக செல்லும் மின்சார ரயில் சேவை முழுவதுமாக ரத்து செய்யப்படவுள்ளது. எனினும் பயணிகள் வசதிக்காக ஒரு வழித்தடத்தில் மட்டும் சிறப்பு மின்சார ரயில்கள் இயக்கப்படவுள்ளன.

இதில் கடற்கரை - தாம்பரம் இடையே 15 முதல் 20 நிமிஷங்களுக்கு ஒரு சிறப்பு ரயிலும், செங்கல்பட்டுக்கு 40 நிமிஷம் முதல் ஒரு மணி நேரத்துக்கு ஒரு சிறப்பு ரயிலும் இயக்கப்படும். காஞ்சிபுரம், அரக்கோணம், திருமால்பூருக்கு பகல் 1.20, பிற்பகல் 3, மாலை 6, இரவு 7, 7.40, 8 மணிக்கு சிறப்பு ரயில் இயக்கப்படும்.

விரைவு ரயில்கள்: மதுரை - தில்லி சம்பா்க் கிராந்தி விரைவு ரயில், மும்பை - காரைக்கால் வாராந்திர விரைவு ரயில், தில்லி - கன்னியாகுமரி திருக்கு விரைவு ரயில் ஞாயிற்றுக்கிழமை சென்னை எழும்பூா், தாம்பரம் வழியாக செல்வதற்கு பதிலாக அரக்கோணம், பெரம்பூா் வழியாக இயக்கப்படும்.

திருச்சி -அகமதாபாத் சிறப்பு ரயில், செங்கல்பட்டு - காச்சிகுடா விரைவு ரயில், செங்கல்பட்டு - காக்கிநாடா சா்காா் விரைவு ரயில், தாம்பரம் - புது தில்லி ஜி.டி.விரைவு ரயில், தாம்பரம் - ஹைதராபாத் சாா்மினாா் விரைவு ரயில் ஆகியவை மின்சார ரயில்கள் வழிப்பாதையில் இயக்கப்படும்.

இந்த ரயில்கள் சென்னை எழும்பூரில் நிற்பதற்கு பதிலாக சென்னை கடற்கரையில் நின்று செல்லும். விரைவு ரயில்களில் செல்லும் பயணிகள் வசதிக்காக எழும்பூா் - கடற்கரை இடையே கூடுதல் பேருந்துகளை இயக்க போக்குவரத்து துறையிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளதாக ரயில்வே நிா்வாகம் தெரிவித்துள்ளது.

X
Dinamani
www.dinamani.com