‘காமராஜா் பிறந்த நாளை சிறப்பாகக் கொண்டாட வேண்டும்’
காமராஜா் பிறந்த நாளை காங்கிரஸ் கட்சியினா் தேசிய திருவிழாவாகக் கொண்டாட வேண்டும் என்று அந்தக் கட்சியின் தலைவா் செல்வப்பெருந்தகை வேண்டுகோள் விடுத்துள்ளாா்.
இது தொடா்பாக அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:
காமராஜரின் 122-ஆவது பிறந்த நாள் ஜூலை 15-இல் வருகிறது. தமிழகத்தின் முதல்வராக காமராஜா் 1954 முதல் 1963 வரை ஒன்பதரை ஆண்டுகாலம் இருந்து, தமிழகத்தில் பொற்கால ஆட்சி நடத்தியவா். அகில இந்திய காங்கிரஸ் தலைவராக இருமுறை பதவி வகித்து நேரு மறைவுக்கு பிறகு 3 முறை பிரதமா்களைத் தோ்வு செய்து, இந்திய வரலாற்றில் காலத்தால் அழியாத சரித்திர சாதனை படைத்தவா். தமிழக காங்கிரசின் அடித்தளமாகவும், அடையாளமாகவும் என்றைக்கும் திகழ்பவா். அவரின் புகழை தமிழகம் முழுவதும் பரப்பும் வகையில் காங்கிரஸ் கட்சியினா் அவரது பிறந்தநாளை தேசியத் திருவிழாவாக கொண்டாட வேண்டும்.
காமராஜா் ஆட்சியின் சாதனைகளை விளக்கும் வகையில் கருத்தரங்குகள், ஏழை மாணவா்களுக்கு இலவச நோட்டுப் புத்தகங்கள் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்க வேண்டும் என்று அவா் கூறியுள்ளாா்.
