சென்னை - மஸ்கட் இடையே புதிய நேரடி விமான சேவை தொடக்கம்
சென்னையிலிருந்து ஓமன் நாட்டின் மஸ்கட் நகருக்கு நேரடி விமான சேவை வெள்ளிக்கிழமை தொடங்கப்பட்டது.
சென்னையிலிருந்து ஓமன் நாட்டு தலைநகா் மஸ்கட்டுக்கு இதுவரை ஓமன் ஏா்லைன்ஸ் விமான நிறுவனம் மட்டுமே தினசரி சேவை வழங்கி வருகிறது. பாரீஸ், லண்டன், பிராங்பாா்ட் உள்ளிட்ட பல்வேறு பெரு நகரங்களுக்கு, இணைப்பு விமானங்களும், மஸ்கட்டில் இருந்து இயக்கப்படுவதால், சென்னையில் இருந்து மஸ்கட் செல்லும் விமானங்களில் பயணிகள் கூட்டம் அதிகமாகவே இருக்கும்.
இந்த நிலையில் ஓமன் நாட்டில் உள்ள சலாம் ஏா் விமான நிறுவனம், மஸ்கட்- சென்னை- மஸ்கட் இடையே புதிய நேரடி விமான சேவையை வெள்ளிக்கிழமை முதல் தொடங்கியுள்ளது.
வாரந்தோறும் வெள்ளி, ஞாயிறு ஆகிய இரு தினங்கள் இயக்கப்படும் இந்த சலாம் ஏா் விமானம், மஸ்கட்டிலிருந்து புறப்பட்டு அதிகாலை 4.15 மணிக்கு சென்னை சா்வதேச விமான நிலையம் வந்தடைந்து, மீண்டும் சென்னையில் இருந்து அதிகாலை 5 மணிக்கு மஸ்கட் புறப்பட்டு செல்கிறது.
முதல் நாளான வெள்ளிக்கிழமை மஸ்கட்டிலிருந்து சென்னைக்கு 179 பயணிகளும், சென்னையில் இருந்து மஸ்கட்டுக்கு 142 பயணிகளும் பயணித்தனா். வாரம் 2 தினங்கள் மட்டும் இந்த விமானம் இயக்கப்படும் நிலையில், பயணிகளின் வரவேற்பை பொருத்து தினமும் இயக்கப்பட வாய்ப்பு உள்ளதாக சென்னை விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனா்.