விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: நாளை வாக்கு எண்ணிக்கை: பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: வாக்கு எண்ணிக்கை மையத்தில் மூன்றடுக்கு போலீஸ் பாதுகாப்பு
விக்கிரவாண்டி இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை மையமான பனையபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறை முன் வியாழக்கிழமை துப்பாக்கி ஏந்தியபடி பாதுகாப்புப் பணியில் ஈடுபட்ட மத்திய பாதுகாப்புப் படையினர்.
விக்கிரவாண்டி இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை மையமான பனையபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறை முன் வியாழக்கிழமை துப்பாக்கி ஏந்தியபடி பாதுகாப்புப் பணியில் ஈடுபட்ட மத்திய பாதுகாப்புப் படையினர்.
Published on
Updated on
2 min read

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் சனிக்கிழமை (ஜூலை 13) எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.

இதையொட்டி, வாக்கு எண்ணிக்கை மையமான பனையபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் மூன்றடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

விக்கிரவாண்டி தொகுதி சட்டப்பேரவைத் தொகுதி திமுக உறுப்பினர் நா.புகழேந்தி மறைவைத் தொடர்ந்து, இந்தத் தொகுதிக்கு ஜூலை 10-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டது. தொடர்ந்து, ஜூன் 14-ஆம் தேதிமுதல் வேட்பு மனுக்கள் பெறப்பட்டு, ஜூன் 24-ஆம் தேதி மனுக்கள் மீதான பரிசீலனை நடைபெற்றது. ஜூன் 26-ஆம் தேதி வேட்பாளர் இறுதிப் பட்டியல் வெளியிடப்பட்டது.

திமுக சார்பில் அந்தக் கட்சியின் விவசாயத் தொழிலாளர் அணி மாநிலச் செயலர் அன்னியூர் அ.சிவா, பாமக சார்பில் வன்னியர் சங்க மாநில துணைத் தலைவர் சி.அன்புமணி, நாம் தமிழர் கட்சி சார்பில் மருத்துவர் பொ.அபிநயா உள்ளிட்ட 11 கட்சிகளின் வேட்பாளர்கள், 18 சுயேச்சைகள் என மொத்தம் 29 வேட்பாளர்கள் களம் கண்டனர்.

82.48 சதவீத வாக்குப் பதிவு: வாக்குப் பதிவுக்காக தொகுதி முழுவதும் 276 வாக்குப் பதிவு மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. புதன்கிழமை காலை 7 மணிமுதல் மாலை 6 மணி வரை வாக்குப் பதிவு நடைபெற்றது.

1,16,962 ஆண்கள், 1,20,040 பெண்கள், 29 மூன்றாம் பாலினத்தவர் என மொத்தம் 2,37,031 வாக்காளர்கள் தேர்தலில் வாக்களிக்கத் தகுதி பெற்றிருந்தனர்.

இவர்களில் 95,536 ஆண்கள், 99,944 பெண்கள், 15 மூன்றாம் பாலினத்தவர் என மொத்தம் 1,95,495 வாக்காளர்கள் வாக்களித்தனர். இது, 82.48 சதவீத வாக்குப் பதிவாகும்.

வாக்குப் பதிவு நடவடிக்கைகள் முடிவடைந்ததும் 276 வாக்குப் பதிவு மையங்களிலும் வாக்குப் பதிவுக்காக பயன்படுத்தப்பட்ட 552 வாக்குப் பதிவு கருவிகள், 2,765 கட்டுப்பாட்டு கருவிகள், 276 யாருக்கு வாக்களித்தோம் என்பதை உறுதி செய்யும் கருவிகளுக்கு (விவிபேட்) "சீல்' வைத்து, வாக்கு எண்ணிக்கை மையமான பனையபுரம் அரசு மேல்நிலைப் பள்ளிக்கு அதிகாரிகள் கொண்டு சென்றனர்.

அங்கு, பாதுகாப்பு அறையில் வாக்குப் பதிவு இயந்திரங்களை வைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் முகவர்கள், வேட்பாளர்கள் முன்னிலையில் அந்த அறைக்கு "சீல்' வைத்தனர்.

20 சுற்றுகளாக...: இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் சனிக்கிழமை எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன. 20 சுற்றுகளாக வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது. இதற்காக 14 மேஜைகள் அமைக்கப்பட்டுள்ளன. தபால் வாக்கு எண்ணிக்கைக்காக 2 மேஜைகள் அமைக்கப்பட்டுள்ளன. ஒரு சுற்றாக தபால் வாக்குகள் எண்ணப்படவுள்ளன.

மூன்றடுக்கு பாதுகாப்பு: வாக்கு எண்ணிக்கை மையமான பனையபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் விழுப்புரம் மாவட்ட எஸ்.பி. தீபக் சிவாச் தலைமையில் மூன்றடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்படுள்ளது.

24 மணி நேரமும் சுழற்சி முறையில் 3 பிரிவுகளாக போலீஸôர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ஒரு சுழற்சிக்கு ஒரு காவல் துணைக் கண்காணிப்பாளர், காவல் ஆய்வாளர், 8 உதவி ஆய்வாளர்கள், 18 காவலர்கள், 14 சிறப்பு காவல் படையினர், 8 மத்திய காவல் பாதுகாப்புப் படையினர் என நாளொன்றுக்கு 150 பேர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

வாக்கு எண்ணிக்கை மையம் முழுவதும் போலீஸ் பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.

வாக்கு எண்ணிக்கை மையத்தின் முக்கியப் பகுதிகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு, வாக்குப் பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பு அறை, வாக்கு எண்ணும் மையத்தின் ஒட்டுமொத்த செயல்பாடுகளும் கண்காணிப்பு மையம் மூலம் கண்காணிக்கப்பட்டு வருகிறது.

வாக்கு எண்ணிக்கை மையம், மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறை முன் துப்பாக்கி ஏந்திய போலீஸôர் மற்றும் மத்திய பாதுகாப்புப் படையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com