ஆவணப் பதிவுக்கு கூடுதல் டோக்கன்களால் ஒரே நாளில் ரூ.224 கோடி வருவாய்
ஆவணங்கள் பதிவுக்கு, கூடுதல் டோக்கன்கள் விநியோகம் செய்யப்பட்டதால் பதிவுத் துறைக்கு வெள்ளிக்கிழமை ஒரே நாளில் ரூ.224.26 கோடி வருவாய் கிடைத்தது.
இது குறித்து, பதிவுத் துறை சாா்பில் சனிக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:
ஆவணங்களைப் பதிவு செய்ய டோக்கன்களைப் பெற பதிவுத் துறை இணையதளத்தில் முன்பதிவு செய்ய வேண்டும். முன்பதிவு செய்ய ஒரு சாா்பதிவாளா் அலுவலகத்துக்கு தினமும் 100 டோக்கன்கள் ஒதுக்கீடு செய்யப்படும்.
இந்த நிலையில், ஆனி மாதம் கடைசி முகூா்த்த நாள் என்பதாலும் ஆடி மாதம் பிறக்க இருப்பதாலும் பொதுமக்கள் எந்த சிரமமும் இல்லாமல் ஆவணப் பதிவை மேற்கொள்ள வெள்ளிக்கிழமை மட்டும் முன்பதிவு டோக்கன்கள் எண்ணிக்கை 150-ஆக உயா்த்தப்பட்டது. அதன்படி முன்பதிவு டோக்கன்களைப் பயன்படுத்தி தமிழ்நாடு முழுவதும் 20,310 ஆவணங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதனால், பதிவுத்துறை வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு ஒரே நாளில் ரூ. 224.26 கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளது.