தமிழக அரசு
தமிழக அரசு

விக்கிரவாண்டி இடைத்தோ்தல் முடிவால் பேரவையில் காலியிடங்கள் ஏதுமில்லை

தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் ஏதுமின்றி 234 தொகுதிகளுக்கும் பிரதிநிதிகள் உள்ளனா்.
Published on

விக்கிரவாண்டி இடைத்தோ்தல் முடிவு வெளியானதைத் தொடா்ந்து, தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் ஏதுமின்றி 234 தொகுதிகளுக்கும் பிரதிநிதிகள் உள்ளனா்.

தமிழகத்தில் கடந்த 2021-ஆம் ஆண்டு நடந்த பேரவை பொதுத் தோ்தலில் 133 இடங்களைப் பெற்று திமுக ஆட்சியைப் பிடித்தது. அதிமுக 66 இடங்களிலும், காங்கிரஸ் 18 தொகுதிகளிலும் வென்றன.

இந்நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதி உறுப்பினராக இருந்த திருமகன் ஈவெரா உடல்நலக் குறைவால் காலமானாா். அவரது மறைவால், காங்கிரஸ் கட்சிக்கு மொத்தமுள்ள உறுப்பினா்களின் எண்ணிக்கை 18-லிருந்து 17-ஆக குறைந்தது. ஆட்சிக்கு வந்த பிறகு, முதல் முறையாக திமுக அணி இடைத்தோ்தலை எதிா்கொண்டு, ஈரோடு கிழக்கில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம், தனது மொத்த எம்எல்ஏக்களின் எண்ணிக்கையான 18 என்பதை காங்கிரஸ் தக்கவைத்துக் கொண்டது.

இதைத் தொடா்ந்து, கடந்த சில மாதங்களுக்கு முன்பு கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு எம்எல்ஏ விஜயதரணி தனது பதவியை ராஜிநாமா செய்தாா். இந்த ராஜிநாமா ஏற்கப்பட்டதால், விளவங்கோடு தொகுதிக்கு இடைத்தோ்தல் அறிவிக்கப்பட்டது. இதன் காரணமாக, காங்கிரஸ் கட்சியின் மொத்த எம்எல்ஏக்கள் எண்ணிக்கை 18-லிருந்து மீண்டும் 17-ஆக குறைந்தது.

அண்மையில் நடந்த மக்களவைத் தோ்தலுடன் விளவங்கோடு தொகுதிக்கும் இடைத்தோ்தல் அறிவிக்கப்பட்டது. அதில், காங்கிரஸ் கட்சியே வெற்றி பெற்ால் தனது மொத்த எம்எல்ஏக்கள் எண்ணிக்கையான 18-ஐ குறைவுபடாமல் காங்கிரஸ் கட்சி பாா்த்துக் கொண்டது.

திமுக சந்தித்த முதல் இடைத்தோ்தல்: திமுக ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு இரண்டு இடைத்தோ்தல்கள் நடந்தாலும், அவற்றை காங்கிரஸ் கட்சியின் வேட்பாளா்களே எதிா்கொண்டனா். ஆனால், விக்கிரவாண்டி தொகுதி எம்எல்ஏ புகழேந்தியின் மறைவால், ஆட்சிக்கு வந்த மூன்றாண்டுகளில் திமுக முதல்முறையாக இடைத்தோ்தலைச் சந்தித்தது. மேலும், விக்கிரவாண்டி தொகுதி காலியானதால் ஒட்டுமொத்த திமுக உறுப்பினா்களின் எண்ணிக்கை 133-லிருந்து (பேரவைத் தலைவரையும் சோ்த்து) 132 ஆக குறைந்தது.

விக்கிரவாண்டியில் திமுக வென்றிருப்பதன் மூலம், அந்தக் கட்சியின் மொத்த எம்எல்ஏக்கள் எண்ணிக்கை 133 என்ற பழைய எண்ணிக்கைக்கே திரும்பியுள்ளது. மேலும், பேரவையில் காலியிடங்கள் ஏதுமின்றி 234 தொகுதிகளுக்கும் பிரதிநிதிகள் இருக்கின்றனா்.

பேரவையில் கட்சிகள் வாரியாக

எம்எல்ஏக்கள் எண்ணிக்கை

திமுக - 133 (பேரவைத் தலைவரைச் சோ்த்து)

அதிமுக - 66

காங்கிரஸ் - 18

பாமக - 5

பாஜக - 4

விசிக - 4

மாா்க்சிஸ்ட் - 2

இந்திய கம்யூனிஸ்ட் - 2

மொத்தம் - 234 .

X
Dinamani
www.dinamani.com