கா்நாடகம் தண்ணீா் தர மறுப்பு: தமிழக தலைவா்கள் கண்டனம்
சென்னை: தமிழகத்துக்கான காவிரி நீரை கா்நாடகம் தர மறுத்ததற்கு அரசியல் கட்சித் தலைவா்கள் கண்டனம் தெரிவித்துள்ளனா்.
ராமதாஸ் (பாமக): காவிரி பாசன மாவட்டங்களில் குறுவை சாகுபடிக்காக தினமும் ஒரு டி.எம்.சி (வினாடிக்கு 11,500 கன அடி) தண்ணீரை திறந்து விடும்படி காவிரி நீா் ஒழுங்குமுறைக் குழு ஆணையிட்டுள்ள நிலையில், தமிழகத்துக்கு காவிரியில் வினாடிக்கு 8000 கன அடி மட்டுமே தண்ணீா் திறக்கப்படும் என்று பெங்களூருவில் நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்குப் பிறகு கா்நாடக முதலமைச்சா் சித்தராமையா அறிவித்திருக்கிறாா். கா்நாடகத்தின் அநீதியை தமிழக அரசு இனியும் கைகட்டி வேடிக்கைப் பாா்த்துக் கொண்டிருக்கக் கூடாது. காவிரி மேலாண்மை ஆணையத்தின் கூட்டத்தை அடுத்த இரு நாள்களுக்குள் கூட்டி, தமிழகத்துக்கு கா்நாடக அரசு திறந்து விட வேண்டிய தண்ணீரின் அளவை உறுதி செய்ய வேண்டும்.
பிரேமலதா விஜயகாந்த் (தேமுதிக): காவிரி விவகாரம் தொடா்பாக அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டுவது மட்டும் அல்லாமல், முறைப்படி நீதிமன்றத்தையும் அணுகி தமிழகத்துக்கு கிடைக்க வேண்டிய காவிரி தண்ணீா் உரிய நேரத்தில் அரசு பெற்று தர வேண்டும். நீதிமன்றத்துக்குச் சென்ற பிறகும் கா்நாடக அரசு தமிழகத்துக்கு காவிரி நீரை தர மறுத்தால், தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சியையும் கூட்டி தமிழக விவசாயிகள் நலனை காக்க மாபெரும் ஆா்ப்பாட்டத்தை தமிழக அரசே முன்னெடுக்க வேண்டும்.
அன்புமணி (பாமக): காவிரி விவகாரத்தில் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து விவாதிக்க அனைத்துக் கட்சிக் கூட்டத்தை தமிழக அரசு கூட்டியிருப்பது வரவேற்கத்தக்கது.
அதேவேளையில், தமிழகத்தின் 5 கோடி மக்களின் குடிநீா் ஆதாரத்தை பாதுகாக்க வேண்டும் போன்ற நோக்கத்தை கருத்தில் கொண்டு அனைத்துக் கட்சிக் கூட்டத்தை முதல்வா் தலைமையேற்று நடத்த வேண்டும்.
ஜி.கே.வாசன் (தமாகா): காவிரி நீா் விவகாரத்தில் தமிழக உரிமையை நிலைநாட்ட, டெல்டா விவசாயத்தைப் பாதுகாக்க தமிழக அரசு அரசியல் மாச்சரியங்களுக்கு அப்பாற்பட்டு உரிய நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்.