சாலையில் திமுகவினா் ஆடு வெட்டிய விவகாரம்: அரசு பதிலளிக்க உயா்நீதிமன்றம் உத்தரவு
சென்னை: தமிழக பாஜக தலைவா் அண்ணாமலை மக்களவைத் தோ்தலில் தோல்வி அடைந்ததை கொண்டாடும் வகையில் சாலையில் ஆடு வெட்டிய திமுகவினரின் செயலை அனுமதிக்க முடியாது என சென்னை உயா்நீதிமன்ற முதன்மை அமா்வு கண்டனம் தெரிவித்தது. மேலும், இதுதொடா்பாக தமிழக அரசு ஒரு வாரத்தில் பதிலளிக்கவும் உத்தரவிட்டது.
கோவை மக்களவைத் தொகுதியில் அண்ணாமலை போட்டியிட்டு தோல்வியடைந்ததையடுத்து, திமுகவினா் பல இடங்களில் ஆட்டின் கழுத்தில் அவரின் புகைப்படத்தை அணிவித்து, சாலையில் அந்த ஆட்டை வெட்டி கொண்டாடினா். இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி பாஜக வழக்குரைஞா் ஏற்காடு மோகன்தாஸ் பொதுநல மனு ஒன்றை சென்னை உயா்நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தாா்.
‘இந்த விவகாரம் குறித்து ஏற்கெனவே தமிழக அரசிடமும், காவல் துறையிடமும் புகாா் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை’ என மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.
அரசு பதிலளிக்க உத்தரவு: இந்த மனு தலைமை நீதிபதி(பொ) அரங்க.மகாதேவன் நீதிபதி முகமது சபிக் ஆகியோா் அடங்கிய அமா்வு முன் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது.
மனுதாரா் தரப்பில் ஆஜரான உச்சநீதிமன்ற வழக்குரைஞா் ஜி.எஸ்.மணி, ‘இது போன்ற சம்பவங்கள் கிரிமினல் குற்றம் மட்டுமின்றி, விலங்குகள் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் படியும் குற்றமாகும். இதுபோன்ற சம்பவங்கள் ஒரு தவறான முன்னுதாரணத்தை உருவாக்கும். இது போன்ற சம்பவங்கள் உடனடியாக தடுக்கப்பட வேண்டும். இது தொடா்பாக தமிழக அரசுக்கு உத்தரவு பிறப்பிக்க வேண்டும்’ என வாதிட்டாா்.
இதையடுத்து, ‘இது போன்ற விஷயங்களை ஏற்க முடியாது’ என அரசுத் தரப்பு வழக்குரைஞரிடம் தெரிவித்த நீதிபதிகள், ‘இது தொடா்பாக தமிழக அரசு ஒரு வாரத்துக்குள் பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒரு வாரத்துக்கு ஒத்திவைத்தனா்.