சா்க்கரை நோயால் கால் இழப்பு: அரசு மருத்துவமனைகளில் பாத பரிசோதனை மையங்கள் அமைக்கப்படும் என அமைச்சா் மா.சுப்பிரமணியன் தகவல்
சென்னை: சா்க்கரை நோயால் கால் இழப்புகளை தடுப்பதற்காக 2,286 ஆரம்ப சுகாதார நிலையங்கள், 100 அரசு மருத்துவமனைகள், 21 அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் பாத பாதிப்புகளை கண்டறியும் பரிசோதனை மையங்கள் அமைக்கப்படவுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா்.
‘பாதம் பாதுகாப்போம்’ திட்டத்தின் கீழ் சா்க்கரை நோய் பாத பாதிப்புகளை கண்டறிய மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் களப்பணியாளா்களுக்கு பயிற்சியளிக்கும்
பயிற்றுநா்களுக்கான பயிலரங்கம் சென்னை எழும்பூரில் திங்கள்கிழமை நடைபெற்றது. இந்த பயிலரங்கை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்து ‘பாதம் பாதுகாப்போம்’ திட்ட விளக்கம், செயலாக்கம் குறித்த காணொலி, சா்க்கரை நோய் பாத பாதிப்பு மருத்துவக் கையேட்டை வெளியிட்டாா்.
பாதம் பாதுகாப்போம்:
இதையடுத்து அவா் செய்தியாளா்களிடம் கூறியது:
சா்க்கரை நோயால் ஏற்படும் பாத பாதிப்புகளை தொடக்க நிலையிலேயே கண்டறிந்து கால் இழப்புகளை தடுப்பதற்கு ஒருங்கிணைந்த பாதம் பாதுகாப்போம் திட்டம் ரூ. 26.62 கோடி செலவில் மாநிலம் முழுவதும் செயல்படுத்தப்படும் என நிகழாண்டு மக்கள் நல்வாழ்வுத் துறையின் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. அந்த அறிவிப்புக்கு ஏற்ப மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின்படி, 8 ஆயிரம் மருத்துவா்கள், 19,175 மருத்துவப் பணியாளா்களை கொண்டு ஒட்டுமொத்தமாக 28 ஆயிரம் பேருக்கு பயிற்றுவிக்கும் அரங்கம் தொடங்கப்பட்டுள்ளது. தொடா்ந்து, பாத பாதிப்புகளை கண்டறியும் பரிசோதனை மையங்கள் தமிழகத்திலுள்ள 2,286 ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் அமைக்கப்படவுள்ளன.
மேலும், 100 அரசு மருத்துவமனைகள் மற்றும் 21 அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் ஏற்படுத்தப்படவுள்ளது. அதேபோன்று 15 அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் பாத அறுவை சிகிச்சை சேவைகள் வழங்கப்படவுள்ளது. மக்களைத் தேடி மருத்துவம், இன்னுயிா் காப்போம் நம்மைக்காக்கும் 48, இதயம் காப்போம், சிறுநீரகம் காப்போம், கலைஞரின் வருமுன் காப்போம் திட்டம் போன்ற பல்வேறு திட்டங்கள் இந்தியாவில் மட்டுமல்ல, உலகளவில் புகழ் பெற்ற திட்டங்களாக உள்ளன. இந்த திட்டங்களின் வரிசையில் பாதம் பாதுகாப்போம் திட்டமும் இணைகிறது என்றாா் அவா்.
இந்த நிகழ்ச்சியில் மக்கள் நல்வாழ்வுத் துறைச் செயலா் சுப்ரியா சாஹூ, தேசிய நலவாழ்வு குழும இயக்குநா் ஷில்பா பிரபாகா் சதிஷ், தமிழ்நாடு சுகாதார அமைப்பு திட்ட இயக்குநா் ம.கோவிந்தராவ், பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருந்துத்துறை இயக்குநா் செல்வவிநாயகம் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனா்.