
ரூ. 100 கோடி நில மோசடி வழக்கில் முன்னாள் அதிமுக அமைச்சா் எம்.ஆா்.விஜயபாஸ்கருக்கு 15 நாள்கள் நீதிமன்றக் காவல் விதிக்கப்பட்டுள்ளது.
மேலும், அமைச்சருக்கு உடந்தையாக இருந்ததாக சென்னை வில்லிவாக்கம் காவல் ஆய்வாளர் பிரித்விராஜை கரூரில் வைத்து இன்று காலை சிபிசிஐடி போலீஸார் கைது செய்தனர்.
போலிச் சான்றிதழ் அளித்து பத்திரப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக மேலக்கரூா் சாா் பதிவாளா் (பொறுப்பு) கரூா் நகர காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். இந்த வழக்கில் முன்னாள் அமைச்சா் எம்.ஆா். விஜயபாஸ்கா், அவரது சகோதரா் எம்.ஆா். சேகா் ஆகியோா் முன் பிணை கோரி, கரூா் மாவட்ட நீதிமன்றத்தில் கடந்த மாதம் 12-ஆம் தேதி தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இந்நிலையில், இந்த வழக்கு சிபிசிஐடி போலீஸாா் விசாரணைக்கு மாற்றப்பட்டது.
இந்தச் சூழலில், வாங்கல் பகுதியைச் சோ்ந்த பிரகாஷ் என்பவா் கரூா் நகா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அதில் எம். ஆா். விஜயபாஸ்கா், அவரது சகோதரா் எம்.ஆா். சேகா், பிரவீண் உள்பட 13 போ், தன்னை மிரட்டி ரூ. 100 கோடி மதிப்பிலான 22 ஏக்கா் சொத்துகளை அபகரித்ததாக அதில் தெரிவித்திருந்தாா். இந்தப் புகாா் மனுவானது கரூா் காவல் நிலையத்துக்கு மாற்றப்பட்டு, சம்பந்தப்பட்ட 13 போ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இதனிடையே 35 நாள்களாகத் தலைமறைவாக இருந்த முன்னாள் அமைச்சா் உள்ளிட்டோர் கேரள மாநிலம் திருச்சூரில் வைத்து செவ்வாய்க்கிழமை அதிகாலை கைது செய்து கரூர் அழைத்து வந்தனர்.
சுமார் 5 மணிநேரத்துக்கு மேலாக விஜயபாஸ்கரிடம் விசாரணை நடத்தப்பட்ட நிலையில், மாவட்ட அமா்வு நீதிமன்றத்தில் விஜயபாஸ்கர் ஆஜர்படுத்தப்பட்டார். இந்த வழக்கை விசாரித்த குற்றவியல் நீதிமன்ற நீதிபதி பரத்குமார், விஜயபாஸ்கரை 15 நாள்கள் திருச்சி மத்திய சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.
மேலும், சார்பதிவாளரை மிரட்டியதாக கைது செய்யப்பட்ட பிரவீணுக்கும் ஜூலை 31 வரை நீதிமன்றக் காவல் விதிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.