
காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள நிலையில், மேட்டூர் அணைக்கு நீர் வரத்து வினாடிக்கு 23,989 கன அடியாக அதிகரித்துள்ளது.
மேலும், வியாழக்கிழமை காலை நிலவரப்படி, அணையில் நீர்மட்டம் 50.03 அடியாக உயர்ந்துள்ளது.
கர்நாடக மாநிலத்தில் காவிரியின் நீர் பிடிப்பு பகுதிகளிலும் கேரள மாநிலம் வயநாட்டிலும் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது.
மழையின் காரணமாக அங்குள்ள கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் அணைகளுக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது.
கபினி அணை நிரம்பியதால் அணையின் பாதுகாப்பு கருதி கடந்த சில நாள்களாக உபரி நீர் காவிரியில் வெளியேற்றப்படுகிறது. கபினி அணையின் உபரி நீர் வரத்து காரணமாக மேட்டூர் காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
நேற்று மாலை மேட்டூர் அணைக்கு வினாடிக்கு 21,520கன அடி வீதம் வந்து கொண்டிருந்த நீர் வரத்து இன்று காலை வினாடிக்கு 23,989 கன அடியாக அதிகரித்துள்ளது.
நேற்று காலை 46.80அடியாக இருந்த மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று காலை 50.03 அடியாக உயர்ந்துள்ளது. ஒரே நாளில் மேட்டூர் அணை நீர்மட்டம் 3.23 அடி உயர்ந்துள்ளது.
அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 1000கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீர் இருப்பு 17.83 டி எம் சி யாக உள்ளது.
காவிரியில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு காரணமாக மூன்றாவது நாளாக அடிப்பாலாறு, செட்டிபட்டி, கோட்டையூர், பண்ணவாடி, பகுதிகளில் மீனவர்கள் மீன் பிடிக்க செல்லவில்லை.
அதேபோல் செட்டிபட்டி கோட்டையூர் பண்ணவாடி பரிசல் துறைகளில் படகு போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.
படகு போக்குவரத்து நிறுத்தப்பட்டதால் தருமபுரி மாவட்டம் நெருப்பூர் நாகமரை ஒட்டனூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து சேலம் மாவட்டம் மேட்டூர் கொளத்தூர் பகுதிகளில் உள்ள பள்ளி கல்லூரிகளுக்கு செல்லும் மாணவ மாணவியரும் மருத்துவமனைக்குச் செல்லும் நோயாளிகளும் பணிக்கு செல்வோரும் காவிரியை கடந்து செல்ல முடியாமல் அவதிக்கு உள்ளானார்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.