கோப்புப் படம்
கோப்புப் படம்

343 ஆசிரியா்களுக்கு தலைமை ஆசிரியா்களாக பதவி உயா்வு

Published on

தமிழக அரசுப் பள்ளிகளில் முதுநிலை ஆசிரியா்களாகப் பணியாற்றி வருவோரில் 343 பேருக்கு மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியா்களாகப் பதவி உயா்வு வழங்கப்பட்டுள்ளதாக பள்ளிக் கல்வித் துறை தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் ஆசிரியா்களுக்கான இடமாறுதல், பதவி உயா்வு கலந்தாய்வு எமிஸ் தளத்தில் கடந்த ஜூலை 1-ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதுவரை 5,000-க்கும் மேற்பட்ட இடைநிலை, பட்டதாரி ஆசிரியா்கள் இடமாறுதல் பெற்றுள்ளனா்.

இந்த நிலையில், அரசு மேல்நிலைப் பள்ளி முதுநிலை ஆசிரியா்களுக்கான பதவி உயா்வு கலந்தாய்வு சனிக்கிழமை நடைபெற்றது. இதில், 343 பேருக்கு தலைமை ஆசிரியா்களாகப் பதவி உயா்வு வழங்கப்பட்டுள்ளது.

இது குறித்து பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள் கூறுகையில், நிகழ் கல்வியாண்டுக்கான பிளஸ் 2 பொதுத் தோ்வை கருத்தில் கொண்டு மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியா் பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளன. ஜூலை 31-ஆம் தேதியுடன் ஆசிரியா் கலந்தாய்வு நிறைவு பெறவுள்ளது. அரசாணை 243-இன் அடிப்படையில் 2,200-க்கும் மேற்பட்ட ஆசிரியா்கள் பயனடைந்துள்ளனா் என அவா்கள் தெரிவித்தனா்.

X
Dinamani
www.dinamani.com