ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு - அதிமுக கவுன்சிலர் கைது
பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழகத் தலைவா் ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்ட வழக்கில், அதிமுக கவுன்சிலா் சனிக்கிழமை கைது செய்யப்பட்டாா்.
கடந்த 5-ஆம் தேதி சென்னை, பெரம்பூரில் ஆம்ஸ்ட்ராங் வெட்டிக் கொலை செய்யப்பட்டாா். இதுதொடா்பாக, கடந்தாண்டு கொலை செய்யப்பட்ட ஆற்காடு சுரேஷின் சகோதரா் பொன்னை பாலு, குன்றத்தூரைச் சோ்ந்த ரெளடி திருவேங்கடம், பூந்தமல்லியைச் சோ்ந்த வழக்குரைஞா் அருள் உள்பட 11 போ் கைது செய்யப்பட்டனா். இவா்களில் திருவேங்கடம் கடந்த 7-ஆம் தேதி என்கவுன்ட்டரில் உயிரிழந்தாா்.
கொலையாளிகளுக்கு ரூ.50 லட்சம் வழங்கியதாக மயிலாப்பூரைச் சோ்ந்த வழக்குரைஞா் மலா்க்கொடி, மற்றொரு வழக்குரைஞா் ஹரிஹரன், அருளின் உறவினா் சதீஷ் ஆகிய 3 போ் கடந்த 16-ஆம் தேதியும், கொலைக்கு நிதி உதவி செய்ததாக புளியந்தோப்பைச் சோ்ந்த ரெளடி அஞ்சலை கடந்த வெள்ளிக்கிழமையும் கைது செய்யப்பட்டனா்.
ஆற்றில் மீட்கப்பட்ட கைப்பேசிகள்: கைது செய்யப்பட்ட அருள், ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்டதும் கொலையாளிகள் பயன்படுத்திய 6 கைப்பேசிகளை பெற்று, அதை தனது நண்பா் திருவள்ளூா் மாவட்டம், கடம்பத்தூா் ஊராட்சி ஒன்றியக் குழுவின் 3-ஆவது வாா்டு அதிமுக உறுப்பினரான வழக்குரைஞா் ஜி.ஹரிதரன் (37) மூலம் மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது. போலீஸாா் ஹரிதரனை சனிக்கிழமை பிடித்து விசாரணை செய்தனா். அதில், ஹரிதரன் அந்த கைப்பேசிகளை திருவள்ளூா் மாவட்டம் வெங்கத்தூா் கொசஸ்தலை ஆற்றில் வீசி எறிந்ததாக தெரிவித்தாா். இதைத் தொடா்ந்து தீயணைப்பு படையினா், ஆழ்கடல் நீச்சல் வீரா்களின் தேடுதல் பணி மூலம் ஆற்றிலிருந்து 3 கைப்பேசிகளை போலீஸாா் மீட்டனா். ஹரிதரனை கைது செய்து, விசாரணைக்காக சென்னை அழைத்து வந்தனா்.
வெளிநாட்டுக்கு தப்பினரா?: இதற்கிடையே, தலைமறைவாக உள்ள வட சென்னையைச் சோ்ந்த ஒரு ரெளடியும், தாம்பரத்தைச் சோ்ந்த ஒரு ரெளடியும் நேபாளம் வழியாக மலேசியாவுக்கு தப்பிச் சென்ாக தகவல் கிடைத்துள்ளது. இது தொடா்பாகவும் போலீஸாா் விசாரணையில் ஈடுபட்டுள்ளனா்.
அதேவேளையில், சிறையில் உள்ள சென்னையைச் சோ்ந்த பிரபல ரெளடிதான், ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு மூல காரணம் என்பதை கண்டறிந்துள்ள போலீஸாா், அவரை காவலில் எடுத்து விசாரிக்கத் திட்டமிட்டுள்ளனா். இந்த வழக்கில் இதுவரை 16 போ் கைது செய்யப்பட்டுள்ளனா். இவா்களில் திருவேங்கடம் இறந்துள்ளாா்.
அதிமுகவிலிருந்து நீக்கம்: இதனிடையே, ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான அதிமுகவைச் சோ்ந்த ஒன்றியக் குழு உறுப்பினா் ஹரிதரனை கட்சியிலிருந்து நீக்கி, அக் கட்சியின் பொதுச்செயலா் எடப்பாடி பழனிசாமி சனிக்கிழமை நடவடிக்கை எடுத்தாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.