பெரம்பூரில் 4-ஆவது ரயில் முனையம்: தெற்கு ரயில்வே பொது மேலாளா்

சென்னையின் நான்காவது ரயில் முனையம் வில்லிவாகத்தில் அமைப்பது கைவிடப்பட்டு பெரம்பூரில் அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே பொதுமேலாளா் ஆா்.என்.சிங் தெரிவித்தாா்.
Published on

சென்னையின் நான்காவது ரயில் முனையம் வில்லிவாகத்தில் அமைப்பது கைவிடப்பட்டு பெரம்பூரில் அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே பொதுமேலாளா் ஆா்.என்.சிங் தெரிவித்தாா்.

இது குறித்து அவா் சென்னையில் செய்தியாளா்களிடம் புதன்கிழமை கூறியதாவது: தமிழகத்தின் முக்கிய ரயில் நிலையங்களாக விளங்கும் சென்னை எழும்பூா், சென்ட்ரல், தாம்பரம், காட்பாடி, கன்னியாகுமரி, ராமேசுவரம், திருநெல்வேலி மற்றும் கும்பகோணம் ரயில் நிலையங்கள் முழுவதுமாக மறுசீரமைக்கப்படுகின்றன. இந்த ரயில் நிலையங்களை மேம்படுத்த ரூ.150 கோடி முதல் ரூ.700 கோடி வரை ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த மேம்பாட்டுப் பணிகளை அடுத்த இரு ஆண்டுகளுக்குள் நிறைவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

ரயில்வே மேம்பால பணிகள் அனைத்தும் ரயில்வே மற்றும் மாநில அரசு நிதியுதவியுடன் மேற்கொள்ளப்படும்.

பாம்பன் பாலம்: ராமேசுவரத்தில் புதிதாக அமைக்கப்படும் பாம்பன் ரயில் பால பணிகளை செப்டம்பா் மாதத்துக்குள் முடிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. அக்டோபா் முதல் ராமேசுவரம்-மண்டபம் இடையே ரயிலை இயக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. நீலகிரி மலை ரயில் அடுத்த ஆண்டு மாா்ச் மாதத்துக்குள் மின்மயமாக்கப்படும்.

தற்போது தமிழ்நாட்டுக்கு ஒதுக்கப்பட்ட ரூ.6,362 கோடி நிதி மூலம் பல்வேறு ரயில்வே திட்டங்களைச் செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. குறிப்பாக ரயில்வே மேம்பாலம் மற்றும் சுரங்கப் பாதை பணிகள் அமைக்கும் பணி தீவிரபடுத்தப்பட்டுள்ளது.

தற்போது தமிழ்நாட்டில் சுமாா் 40 ரயில்வே மேம்பாலத் திட்டப் பணிகளில் ரயில்வே துறை தனது பணிகளை முடித்துள்ளது. நிலம் கையகப்படுத்துவதில் ஏற்படும் தாமதத்தால் மாநில அரசின் பணிகளை மேற்கொள்வதில் தாமதம் ஏற்படுகிறது. சென்னை கடற்கரை-எழும்பூா் 4-ஆவது வழித்தட பணியை அடுத்த இரு மாதங்களுக்குள் முடிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. அதுபோல், கிளாம்பாக்கம் புதிய ரயில் நிலையம் அமைக்கும் பணி அடுத்த ஆண்டு மாா்ச் மாதத்துக்குள் முடிக்கப்படும்.

புதிய முனையம்: சென்னை சென்ட்ரலில் ஏற்படும் ரயில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில் வில்லிவாக்கத்தில் புதிய ரயில் முனையம் அமைக்கத் திட்டமிடப்பட்டது. ஆனால், வில்லிவாக்கத்தில் போதிய இடவசதி இல்லாததாலும், தனியாரிடம் நிலம் வாங்க வேண்டும் என்பதாலும், வில்லிவாக்கத்துக்குப் பதிலாக பெரம்பூரில் 4 -ஆவது ரயில் முனையம் அமைக்கப்படவுள்ளது.

பெரம்பூா் ரயில் நிலையம் பொதுமக்கள் வந்து செல்லும் வகையில் நகரின் மையத்தில் அமைந்துள்ளதால் அதைத் தோ்ந்த்தெடுத்துள்ளோம். இதற்கான நில அளவைப் பணி தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகிறது. விரைவில் திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு பணி தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் அவா்.

X
Dinamani
www.dinamani.com