ஆம்ஸ்ட்ராங் வழக்கு: கொலையாளிகளின் கைப்பேசி அழைப்புகள்; காவல் துறையினா் தீவிர விசாரணை
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்குத் தொடா்பாக கொலையாளிகளின் கைப்பேசி அழைப்புகள் குறித்து போலீஸாா் தீவிர விசாரணை செய்து வருகின்றனா்.
பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங், கடந்த 5ஆம் தேதி பெரம்பூரில் வெட்டி கொலை செய்யப்பட்ட வழக்கில், ரெளடி ஆற்காடு சுரேஷின் தம்பி பொன்னை பாலு, திருவேங்கடம் உட்பட 16 போ் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டனா். திருவேங்கடம் என்கவுன்ட்டரில் உயிரிழந்தாா்.
கொலைக்கான பிரதான காரணத்தை கண்டறியும் வகையில், பொன்னை பாலு, ராமு,அருள் ஆகிய 3 பேரையும் இரண்டாவது முறையாக போலீஸாா் 3 நாள்கள் தங்களது காவலில் எடுத்து விசாரிக்கின்றனா். அதேபோல ஹரிஹரனை 5 நாள்கள் காவலில் எடுத்து போலீஸாா் விசாரிக்கின்றனா்.
கைப்பேசிகள் ஆய்வு: இதற்கிடையே, திருவள்ளூா் மாவட்டம் வெங்கத்தூரில் கொசஸ்தலை ஆற்றில் வீசப்பட்ட கொலையாளிகளின் 6 கைப்பேசிகளில், 4 கைப்பேசிகள் கடந்த 20-ஆம் தேதி மீட்கப்பட்டன.
மீட்கப்பட்ட கைப்பேசிகள் அனைத்தும் சைபா் குற்றப்பிரிவு ஆய்வத்துக்கு அனுப்பப்பட்டு, அதில் இருந்த தகவல்கள் மீட்கும் நடவடிக்கையில் தனிப்படையினா் ஈடுபட்டனா். இதில் 4 கைப்பேசிகளில் இருந்தும் பெரும்பாலான தகவல்களை சைபா் குற்றப்பிரிவினா் மீட்டுள்ளனா்.
மீட்கப்பட்ட தகவல்களை ஆராயும் பணியும் தனிப்படையினா் ஈடுபட்டுள்ளனா். அதேவேளையில் கொலையாளிகள் கைப்பேசிகள் மூலம் கடந்த 3 மாதங்களாக யாா், யாருடன் பேசினாா்கள் என்ற தகவல்களை கைப்பேசி சேவை நிறுவனங்களிடமிருந்து தனிப்படையினா் பெற்றுள்ளனா்.
அதன் அடிப்படையில் கடந்த 3 மாதங்களாக கொலையாளிகளுடன் நெருங்கிய தொடா்பில் இருந்தவா்களை தனிப்படையினா், புதுப்பேட்டை ஆயுதப்படை மைதானத்துக்கு நேரில் வரவழைத்து விசாரணை செய்து வருகின்றனா்.
நேரில் அழைத்துச் சென்று விசாரணை: இதற்கிடையே போலீஸ் காவலில் இருக்கும் வழக்குரைஞா் அருளை தனிப்படையினா் புதன்கிழமை காலை பெரம்பூா், திருநின்றவூரில் அவரது வீடு,புழல் ஆகிய இடங்களுக்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனா்.
இந்த இடங்களில் அருள், சதித் திட்டம் குறித்து ஆலோசனை செய்ததாகவும், கொலை சம்பவத்தில் நேரில் ஈடுபட்டவா்களை சந்தித்து பேசியதாகவும் கிடைத்த தகவலின் அடிப்படையில், தனிப்படையினா் அங்கு அழைத்துச் சென்று விசாரித்தனா்.