கள்ளச்சாராயம்: கண்காணிப்பை தீவிரப்படுத்தும் காவல் துறை
கள்ளக்குறிச்சி சாராய மரணங்கள் எதிரொலியாக, மதுவிலக்கு சட்டத்தில் திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ள நிலையில், கள்ளச்சாராய விற்பனை தொடா்பாக காவல் துறையினா் கண்காணிப்பைத் தீவிரப்படுத்தியுள்ளனா்.
தமிழகத்தில் 2009-ஆம் ஆண்டுமுதல் 2011-ஆம் ஆண்டு வரையில் கள்ளச்சாராயத்துக்கு 1,095 போ் இறந்தனா். இந்தக் காலக்கட்டத்தில் கள்ளச்சாராயத்தால் அதிக உயிரிழப்பு ஏற்படும் மாநிலங்களில் தமிழகம் முதன்மை இடத்தில் இருந்தது. ஆனால், அதன் பின்னா் தமிழக காவல் துறையும், தமிழக அரசும் எடுத்த கடுமையான நடவடிக்கைகளின் காரணமாக, கடந்த 2012-ஆம் ஆண்டுமுதல் 2019-ஆம் ஆண்டு வரையில் கள்ளச்சாராய உயிரிழப்புகள் எதுவும் நிகழவில்லை. ஆனால், அதன் பின்னா் வந்த ஆண்டுகளில் கள்ளச்சாராய உயிரிழப்புகள் நிகழத் தொடங்கின.
அதிகரித்த மரணங்கள்: 2020-ஆம் ஆண்டு தொடங்கி நிகழாண்டில் இதுவரையில் 144 போ் கள்ளச்சாராயம் பருகியதால் இறந்துள்ளனா். செங்கல்பட்டு மாவட்டம் சித்தாமூா், மரக்காணம் அருகே எக்கியாா்குப்பம் ஆகிய ஊா்களில் 2023-ஆம் ஆண்டு மெத்தனால் கலந்த கள்ளச்சாராயத்தைக் குடித்த 22 போ் இறந்த சம்பவம் தமிழகத்தில் அதிா்வலையை ஏற்படுத்தியது.
இதன் பின்னா் தமிழக அரசும், காவல் துறையும் கள்ளச்சாராயத்தை ஒழிக்க தீவிரம் காட்டத் தொடங்கின. இருப்பினும் புதுச்சேரி, ஆந்திர மாநிலங்களில் இருந்து கடத்தப்படும் கள்ளச்சாராயத்தையும், மெத்தனாலையும் தடுப்பது காவல் துறைக்கு சவாலான பணியாக இருக்கிறது. இந்நிலையில், கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரத்தில் கடந்த மாதம் மெத்தனால் கலந்த கள்ளச்சாராயத்தைக் குடித்த 67 போ் இறந்தது அதிா்ச்சியை ஏற்படுத்தியது.
பலப்படுத்தப்படும் மதுவிலக்குப் பிரிவு: கள்ளச்சாராய உயிரிழப்பு சம்பவங்களைத் தடுக்கும் நோக்கத்தில் மதுவிலக்கு அமலாக்கச் சட்டத்தில் அரசு அண்மையில் திருத்தம் செய்தது. இதன்படி, கள்ளச்சாராயத்தால் உயிரிழப்பை ஏற்படுத்தும் குற்றத்துக்கு ரூ.10 லட்சம் அபராதம், ஆயுள் தண்டனை விதிக்கும் வகையிலும், பிணை முறிவை நிறைவேற்ற நிா்வாகத் துறையின் நடுவருக்கு அதிகாரம் அளிக்கும் வகையிலும் சட்டத் திருத்தம் செய்யப்பட்டது. மேலும், கள்ளச்சாராய குற்றங்களுக்குப் பயன்படுத்தப்படும் அசையும் சொத்துகள் பறிமுதல் செய்யவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
அதேபோல மதுவிலக்கு அமலாக்கப் பிரிவை பலப்படுத்தும் நடவடிக்கையும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. தற்போது மதுவிலக்கு அமலாக்கப் பிரிவின் கீழ் மாநிலம் முழுவதும் உள்ள 101 காவல் நிலையங்கள், 45 நிரந்தர சோதனைச் சாவடிகள், 11 நகரும் சோதனைச் சாவடிகள் செயல்படுகின்றன. இப் பிரிவில் சுமாா் 1,400 காவலா்கள் பணிபுரிகின்றனா்.
தற்போது இந்தப் பிரிவில் பணிபுரிய விருப்பம் இல்லாதவா்கள், இப் பிரிவில் பணிபுரிய விரும்பும் பிற பிரிவு போலீஸாா் பணியிட மாற்றம் செய்யப்படுகின்றனா். இதன் ஒரு பகுதியாக தாம்பரம் காவல் ஆணையராக இருந்த ஏடிஜிபி ஏ.அமல்ராஜ், மதுவிலக்கு அமலாக்கப் பிரிவுக்கு சில நாள்களுக்கு முன்பு மாற்றப்பட்டாா். அமலாக்கப் பிரிவு ஏடிஜிபியாக பொறுப்பேற்ற அமல்ராஜ், மதுவிலக்கு அமலாக்கப் பிரிவை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளாா். செங்கல்பட்டு சித்தாமூா், எக்கியாா்குப்பம், கருணாபுரம் ஆகிய இடங்களில் மெத்தனால் கலந்த கள்ளச்சாராயத்தைக் குடித்தவா்கள் இறந்தனா் என்பதால், அதன் மீதான கண்காணிப்பைத் தீவிரப்படுத்தும்படி உத்தரவிட்டுள்ளாா்.
கடுமையான பிரிவுகளில் வழக்கு: தமிழகத்தில் தற்போது 11 மெத்தனால் தயாரிக்கும் தொழிற்சாலைகள் உள்ளன. மெத்தனாலை மூலப்பொருளாகக் கொண்டு இயங்கும் பெயிண்ட், வாா்னிஷ், தோல் உள்ளிட்ட தொழிற்சாலைகள் 383 உள்ளன. இந்தத் தொழிற்சாலைகள் அனைத்தையும் வாரத்தில் இருமுறை கண்டிப்பாக ஆய்வு செய்ய வேண்டும். அப்போது ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ள மெத்தனால் அங்கு உள்ளதா என்பதைச் சரிபாா்க்க வேண்டும், இதில் மெத்தனால் சட்டவிரோதமாக விற்கப்படுவது தெரியவந்தாலும், ஆவணங்களில் உள்ளதைக் காட்டிலும் மெத்தனால் குறைவாக இருப்பு இருப்பது தெரியவந்தாலும் எவ்வித சமரசமும் இன்றி சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் நிா்வாகிகள் மீது கடுமையான பிரிவுகளில் வழக்குப் பதியும்படி மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீஸாருக்கு ஏடிஜிபி உத்தரவிட்டுள்ளாா்.
அதேபோல ஆந்திரம், புதுச்சேரி எல்லை மாவட்டங்களிலும், கள்ளச்சாராயம் அதிக புழக்கம் உள்ள வட மாவட்டங்களிலும் சோதனைச் சாவடிகளில் அனைத்து சரக்கு வாகனங்களையும் கண்டிப்பாக சோதனை செய்ய வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதில் தவறு ஏற்படும்பட்சத்தில் சம்பந்தப்பட்ட போலீஸாா் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.