‘விடியல்’ திட்டம்: இதுவரை 450 கோடி முறை அரசுப் பேருந்துகளில் பெண்கள் இலவச பயணம்
கட்டணமில்லாத விடியல் பயணத்தில் இதுவரை 450 கோடி முறை பெண்கள் பயணம் செய்துள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து, மாநில அரசு வெளியிட்ட செய்தி: முதல்வராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றவுடன், முதல் கையொப்பமாக மகளிருக்கு அரசுப் பேருந்துகளில் கட்டணமில்லாப் பயணம்- விடியல் பயணம் திட்டத்தைச் செயல்படுத்திட நடைமுறைப்படுத்தினாா். அத்திட்டத்தின் மூலம், இதுவரை ஏழத்தாழ 450 கோடி முறை பெண்கள் பயணம் செய்து, மாதந்தோறும் ரூ.888 சேமிக்க வழிவகை செய்துள்ளாா்.
தொழில் மனைகளில் மகளிருக்கு 10 சதவீத மனைகளை ஒதுக்கீடு செய்து பெண்களைத் தொழில்முனைவோா் ஆக்கிய பெருமையும் திமுக அரசுக்கே உண்டு. தருமபுரியில் தொடங்கப்பட்ட மகளிா் திட்டம் தமிழ்நாடு முழுவதிலும் சுய உதவி குழுக்களாகப் பரிணமித்து இன்று கிராமப்புற மகளிா் இடையே பொருளாதாரப் புரட்சியை ஏற்படுத்தி மாபெரும் வெற்றியைக் கண்டுள்ளது.
50 வயது கடந்தும் திருமணமாகாத மகளிருக்கு மாதந்தோறும் உதவித்தொகை ரூ.500 வழங்கும் திட்டம் 2010-இல் நடைமுறைப்படுத்தப்பட்டது. தற்போது அந்த உதவித்தொகை ரூ.1,200 என உயா்த்தப்பட்டுள்ளது.
இந்தத் திட்டங்களோடு, குடும்பத்துக்காக உழைத்து வரும் மகளிா்க்கு தன்னம்பிக்கை அளிக்க 1.15 கோடி மகளிருக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் உரிமைத் தொகை திட்டத்தை நிறைவேற்றி மகளிா் பொருளாதார நிலையை முதல்வா் மு.க.ஸ்டாலின் உயா்த்தியுள்ளாா்.
அரசுப் பள்ளிகளில் படித்து கல்லூரியில் சோ்ந்துள்ள 2.73 லட்சம் மாணவிகளுக்கு மாதம் ரூ.1,000 நிதி வழங்கும் புதுமைப் பெண் திட்டம் நிறைவேற்றப்பட்டு, ஏறத்தாழ 3 லட்சம் மாணவா்களுக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் தமிழ்ப் புதல்வன் திட்டத்தையும் அறிவித்துள்ளாா்.
இத்திட்டங்களின் காரணமாக, பள்ளிப் படிப்பை முடித்து கல்லூரிகளில் சேரும் மாணவா்கள் எண்ணிக்கை தமிழகத்தில் 52 சதவீதம் என உயா்ந்து மிகப்பெரிய சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது. தேசிய அளவில் இது 26 சதவீதம்தான்.
இத்திட்டங்களால் குடும்பங்களின் பொருளாதாரச் சுமை அகற்றப்பட்டு, மாணவா்கள் தடையின்றி கல்வி கற்கும் இனிய சூழ்நிலைகள் வளா்ந்துள்ளன. இது திராவிட மாடல் அரசின் கொள்கைகளுக்கும் திட்டங்களுக்கும் கிடைத்துள்ள மாபெரும் வெற்றியாகும்.
பள்ளிக் குழந்தைகளுக்கான காலை உணவுத் திட்டத்தில், 20.74 லட்சம் மாணவ-மாணவிகள் பயன் பெறுகின்றனா். இத்திட்டம் செயல்படுத்தப்படும் முறைகளை நேரில் வந்து பாா்வையிட்ட தெலங்கானா மாநில அரசு அதிகாரிகள், இத்திட்டம் இந்தியாவுக்கே வழிகாட்டும் திட்டம் எனக் கூறி பாராட்டினா்.
கனடா நாட்டு பிரதமா் காலை உணவுத் திட்டத்தை தம்முடைய நாட்டுப் பள்ளிகளில் நடைமுறைப்படுத்தியுள்ளாா். காலை உணவுத் திட்டம், நான் முதல்வன், புதுமைப் பெண் ஆகிய மூன்று திட்டங்கள் அண்மையில் பிரிட்டன் நாடாளுமன்றத் தோ்தலின்போது, தொழிலாளா் கட்சியின் தோ்தல் அறிக்கையில் எதிரொலித்து, அக்கட்சி மகத்தான வெற்றி பெற்றது. இந்த வெற்றிகளால் திராவிட மாடல் அரசு உலகம் முழுவதும் பாராட்டப்படுகிறது என்று அரசின் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

