
நில அபகரிப்பு வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கருக்கு ஜூலை 31ஆம் தேதி வரை நீதிமன்றக் காவல் விதிக்கப்பட்டுள்ளது.
கரூா் மாவட்டம், வாங்கல் குப்புச்சிப்பாளையத்தைச் சோ்ந்தவா் பிரகாஷ். இவருக்கு சொந்தமான ரூ.100 கோடி மதிப்பிலான நிலத்தை முன்னாள் அமைச்சா் எம்.ஆா்.விஜயபாஸ்கரும், அவரது தம்பி சேகா் உள்பட 3 போ் சோ்ந்து மிரட்டி எழுதி வாங்கியதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் தனது நிலத்தை மோசடி செய்து எழுதி வாங்கிவிட்டதாக முன்னாள் அமைச்சா் எம்.ஆா்.விஜயபாஸ்கா், அவரது தம்பி சேகா் உள்பட 3 போ் மீது பிரகாஷ் கரூா் நகர காவல்நிலையத்தில் புகாா் செய்தாா்.
இதனிடையே இந்த வழக்கு சிபிசிஐடி போலீஸாரிடம் ஒப்படைக்கப்பட்டது. இதையடுத்து, கரூர் மாவட்ட சிபிசிஐடி போலீஸார் 8 தனிப்படைகள் அமைத்து தலைமறைவான முன்னாள் அமைச்சர் எம் .ஆர். விஜயபாஸ்கர் மற்றும் அவரது தம்பி உள்ளிட்டோரை தேடி வந்த நிலையில், அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் கேரளத்தில் கைது செய்யப்பட்டார்.
இந்த வழக்கில் 2 நாள் போலீஸ் காவல் முடிந்ததையடுத்து கரூர் குற்றவியல் நீதிமன்றத்தில் எம்.ஆர்.விஜயபாஸ்கர் இன்று ஆஜர்படுத்தப்பட்டார்.
அப்போது அவரை ஜூலை 31ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.