ஒன்றியத்திலுள்ள பாரதிய ஜனதா கட்சி அரசு பெருந்தன்மையற்ற வகையில் நடந்துகொள்வதாகக் குற்றம் சாட்டியுள்ளார் தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின்.
தில்லியில் இன்று நடைபெறவுள்ள நீதி ஆயோக் கூட்டத்தை எதற்காக தமிழக அரசு புறக்கணிக்கிறது என்பது குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் விடியோ செய்தியொன்றை முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ளார்.
இந்தச் செய்தியில் ஸ்டாலின் குறிப்பிட்டிருப்பதாவது: ``பாஜக அரசு மட்டுமே அரசியல் நோக்கத்தோடு அரசியல் நடத்துகிறார்கள். மக்களவைத் தேர்தலில் பாஜகவை புறக்கணித்த மாநில மக்களை பழிவாங்கும் விதமாக மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட்டானது சுயநலத்திற்காக நாற்காலியைக் காப்பாற்றிக் கொள்ள உருவாக்கப்பட்டதாக உள்ளது.
மேலும் தவறு செய்கிறீர்கள், மேலும் தோல்வியைச் சந்திப்பீர்கள்” என்று தெரிவித்துள்ளார்.
தில்லியில் இன்று பிரதமர் மோடி தலைமையிலான நீதி ஆயோக் நிர்வாகக் குழு கூட்டம் நடைபெறவுள்ளது.
மத்திய பட்ஜெட்டில் எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களுக்கு பாகுபாடு காட்டப்பட்டிருப்பதாகக் கூறி, நீதி ஆயோக் கூட்டத்தைப் புறக்கணிப்பதாக தமிழக முதல்வர் ஸ்டாலின் உள்பட 6 மாநில முதல்வர்கள் அறிவித்துள்ளனர்.
இருப்பினும், மீண்டும் மத்திய திட்டக் குழுவைக் கொண்டுவர வலியுறுத்துவதற்காக கலந்து கொள்ளவிருப்பதாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி அறித்துள்ளார்.
இந்த நிலையில், மத்திய நிதிநிலை அறிக்கையில், மாற்றாந்தாய் போக்குடன் தமிழ்நாட்டை வஞ்சித்த மத்திய பாஜக அரசைக் கண்டித்து, தமிழகம் முழுவதும் சனிக்கிழமை திமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த போராட்டத்தில், கட்சி நிா்வாகிகள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் உள்பட பலரும் பங்கேற்றுள்ளனர்.
சென்னையில் இரண்டு இடங்களில் நடைபெற்ற போராட்டத்தில், மக்களவை உறுப்பினர் தயாநிதி மாறன், தமிழச்சி தங்கப்பாண்டியன், கலாநிதி வீராசாமி மற்றும் வில்சன் உள்ளிட்டோர் பங்கேற்று மத்திய பாஜக அரசுக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பினர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.