
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகேயுள்ள சக்திநாயக்கன்பாளையம் பகுதியில் வசித்து வரும் சண்முகம் என்பவரது மகன் செந்தில்குமார். எம்பிஏ பட்டதாரியான இவர் பெங்களூரில் ஐடி ஊழியராக பணிபுரிந்துள்ளார். இந்த நிலையில், இவர் கடந்த சில ஆண்டுகளாக மனநலம் பாதிக்கப்பட்டு அதற்கான சிகிச்சை பெற்று வந்துள்ளார்.
இந்த நிலையில், பள்ளி விடுமுறை நாளான இன்று(ஜூலை 27) செந்தில்குமாரின் பக்கத்து வீட்டில் வசித்து வரும் 10 வயது சிறுமி ஒருவர் இவரது வீட்டில் விளையாடிக் கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது.
அப்போது யாரும் எதிர்பாராத வகையில், அங்கே விளையாடிக் கொண்டிருந்த சிறுமியை தான் மேஜையின்கீழ் மறைத்து வைத்திருந்த கத்தியால் கழுத்தில் வெட்டியுள்ளார் செந்தில்குமார். அதில் வலி தாங்காமல் துடிதுடித்துப்போன சிறுமி அலறவே, இதைக் கண்ட செந்தில்குமாரின் தாயார் அவரை தடுக்க முற்பட்டுள்ளார். இதனிடையே அலறல் சத்தம் கேட்டு அங்கு சென்ற இரு நபர்களையும் செந்தில்குமார் அரிவாளால் வெட்டியுள்ளார்.
அலறல் சத்தம் கேட்டு அங்கு சென்ற அக்கம்பக்கத்தினர், அவரிடமிருந்த கத்தியைப் பறித்து அவரை கட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். மேலும், ரத்த வெள்ளத்தில் இருந்த சிறுமியை மீட்டு திருச்செங்கோடு அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டுள்ள சிறுமி சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த சம்பவம் குறித்து காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், சம்பவ இடத்துக்கு சென்ற காவல்துறையினர் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.