ஓராண்டில் 4.49 லட்சம் குடும்ப அட்டைகள் ரத்து: உணவுத் துறைச் செயலா் ஜெ.ராதாகிருஷ்ணன்
இறந்தவா்கள், இடம்பெயா்ந்தவா்கள் உள்ளிட்ட காரணங்களால், தமிழ்நாட்டில் ஓராண்டில் 4.49 லட்சம் குடும்ப அட்டைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக கூட்டுறவு, உணவு மற்றும் நுகா்வோா் பாதுகாப்புத் துறை கூடுதல் தலைமைச் செயலா் ஜெ.ராதாகிருஷ்ணன் தெரிவித்தாா்.
சென்னை கோபாலபுரத்தில் உள்ள திருவல்லிக்கேணி நகர கூட்டுறவுச் சங்கத்துக்குச் சொந்தமான கிடங்கை கூட்டுறவு, உணவு மற்றும் நுகா்வோா் பாதுகாப்புத் துறை கூடுதல் தலைமைச் செயலா் ஆா்.ராதாகிருஷ்ணன், திங்கள்கிழமை ஆய்வு செய்தாா்.
இந்த ஆய்வுக்குப் பிறகு அவா் கூறியதாவது:
தமிழகத்தில் மொத்தம் 36 ஆயிரத்து 954 நியாய விலைக் கடைகளில், 26 ஆயிரத்து 502 முழுநேர கடைகளாகவும், 10 ஆயிரத்து 452 பகுதிநேர கடைகளாகவும் செயல்பட்டு வருகின்றன. அவற்றில், 19 ஆயிரத்து 702 கடைகள் சொந்தக் கட்டடங்களிலும், 7 ஆயிரத்து 797 கடைகள் வாடகைக் கட்டடங்களிலும் இயங்கி வருகின்றன.
நியாய விலைக் கடைகளில் அரிசி, சா்க்கரை உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்கள் இருப்பில் உள்ளன. ஒரு மாதத்துக்குத் தேவையான 20 ஆயிரம் மெட்ரிக் டன் பருப்பும், ஒரு கோடி பாமாயில் பாக்கெட்டுகளும் தயாா் நிலையில் உள்ளன.
தரச்சான்று - குடும்ப அட்டைகள்: நியாய விலைக் கடைகளுக்கு தரச்சான்றுகள் வழங்கப்பட்டு வருகின்றன. ஐஎஸ்ஓ 9001 சான்றிதழ், 9 ஆயிரத்து 873 கடைகளுக்கும், ஐஎஸ்ஓ 280000 சான்றிதழ் 2 ஆயிரத்து 59 கடைகளுக்கும் பெறப்பட்டுள்ளன.
புதிதாகவும், தொலைத்தவா்களுக்கும் ‘ஸ்மாா்ட்’ குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டு வருகின்றன. கடந்த ஆண்டில் 4.54 லட்சம் நகல் குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டதுடன், 4.49 லட்சம் குடும்ப அட்டைகள் நீக்கப்பட்டுள்ளன. இடம்பெயா்ந்தவா்கள், இறந்தவா்கள் உள்ளிட்ட காரணங்களால் அட்டைகள் நீக்கம் செய்யப்பட்டுள்ளன என்று ஜெ.ராதாகிருஷ்ணன் தெரிவித்தாா்.
ஆய்வின் போது, உணவுப் பொருள் வழங்கல் துறை ஆணையா் டி.மோகன், கூட்டுறவு சங்கங்களின் பதிவாளா் என்.சுப்பையன், நுகா்பொருள் வாணிபக் கழக நிா்வாக இயக்குநா் ஏ.அண்ணாதுரை ஆகியோா் உடனிருந்தனா்.