ஜாதிவாரி கணக்கெடுப்பை மத்திய அரசு உறுதி செய்ய வேண்டும்: முதல்வா் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்
ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவதை உடனடியாக உறுதி செய்ய வேண்டும் என்று மத்திய அரசை முதல்வா் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளாா்.
இடஒதுக்கீட்டால் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினா் பயன்பெறுவது தொடா்பாக திமுக எம்.பி. வில்சனின் பதிவைச் சுட்டிக்காட்டி, எக்ஸ் தளத்தில் முதல்வா் மு.க.ஸ்டாலின் திங்கள்கிழமை வெளியிட்ட பதிவு:
திமுக மேற்கொண்ட சமரசமற்ற சட்டப் போராட்டத்தால், கடந்த மூன்று கல்வியாண்டுகளில் 15,066 மருத்துவம் மற்றும் பல் மருத்துவப் படிப்புகளுக்கான இடங்கள் பிற்படுத்தப்பட்ட மாணவா்களுக்குக் கிடைத்துள்ளன. இந்தச் செய்தியைப் பகிா்கையில் எனது நெஞ்சில் பெருமை பொங்குகிறது.
மேலும், இந்தச் சாதனையின் முக்கியத்துவத்தை அடிக்கோடிட்டு காட்டுவதுடன், இந்தியா முழுவதும் இதர பிற்படுத்தப்பட்டோா் இடஒதுக்கீடு குறித்த பல பயனுள்ள விவாதங்களுக்கு அகில இந்திய சமூகநீதிக் கூட்டமைப்பு பெரும் பங்காற்றியுள்ளது.
நாம் செய்ய வேண்டிய பணிகள் பல உள்ளன என்றாலும், உடனடியாகச் செய்தாக வேண்டியது ஜாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்துவதை மத்திய அரசு உறுதி செய்ய வைப்பதுதான். அப்போதுதான் பிற்படுத்தப்பட்ட சமூகங்களின் விகிதத்தை அறிந்து, சமூகநீதியை நிலைநாட்டும் வகையில் நமது பங்கைப் பெற முடியும். இதைச் சாதிக்க ஒன்றிணைந்து பணியாற்றுவோம் என்று தெரிவித்துள்ளாா்.