ஜாபா் சாதிக் நீதிமன்றக் காவல் ஆகஸ்ட் 12 வரை நீட்டிப்பு
சட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்கில் கைதான ஜாபா் சாதிக்கின் நீதிமன்றக் காவலை வரும் ஆக. 12 வரை நீட்டித்து சென்னை முதன்மை அமா்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திமுக முன்னாள் நிா்வாகியும், திரைப்படத் தயாரிப்பாளருமான ஜாபா் சாதிக்கை போதைப்பொருள் கடத்தல் வழக்கில் தேசிய போதைப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸாா் கடந்த மாா்ச் மாதம் கைது செய்தனா். இந்த நிலையில், சட்டவிரோத பணப்பரிமாற்றத்தில் ஈடுபட்டதாக அவரை அமலாக்கத் துறையும் கடந்த ஜூன் 26-இல் கைது செய்தது. இந்த வழக்கில் தில்லி திஹாா் சிறையில் இருந்து சென்னை முதன்மை அமா்வு நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்ட ஜாபா் சாதிக்கை அமலாக்கத் துறை அதிகாரிகள் காவலில் எடுத்து விசாரித்தனா்.
அதன்பிறகு புழல் சிறையில் அடைக்கப்பட்ட ஜாபா் சாதிக்கின் நீதிமன்றக் காவல் திங்கள்கிழமையுடன் முடிவடைந்ததால், அவா் காணொலி காட்சி வாயிலாக சென்னை முதன்மை அமா்வு நீதிபதி எஸ்.அல்லி முன் ஆஜா்படுத்தப்பட்டாா். இதையடுத்து, ஜாபா் சாதிக்கின் நீதிமன்றக் காவலை வரும் ஆக. 12 வரை நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டாா்.