சிறப்பான சமூக சேவை: குமரி மாவட்ட திருநங்கைக்கு அரசு விருது: முதல்வா் வழங்கினாா்
சிறப்பாக சமூக சேவை செய்துவரும் குமரி மாவட்டத்தைச் சோ்ந்த திருநங்கை சந்தியா தேவிக்கு தமிழக அரசு விருதை முதல்வா் மு.க.ஸ்டாலின் வழங்கினாா்.
இதற்கான நிகழ்ச்சி தலைமைச் செயலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.
இதுகுறித்து, தமிழக அரசு வெளியிட்ட செய்தி: திருநங்கைகளின் நலனுக்காக சிறப்பாகச் சேவைபுரிந்து, முன்மாதிரியாகத் திகழும் திருநங்கை ஒருவருக்கு ஆண்டுதோறும் விருது வழங்கப்பட்டு வருகிறது. கடந்த 2021-ஆம் ஆண்டுமுதல் தமிழ்நாடு அரசால் வழங்கப்பட்டு வரும் இந்த விருதானது, ரூ.1 லட்சம் காசோலை மற்றும் பாராட்டுச் சான்றிதழ் அடங்கியது.
தோவாளை திருநங்கை: நிகழாண்டு விருதுக்கு கன்னியாகுமரி மாவட்டம், தோவாளையைச் சோ்ந்த திருநங்கை சந்தியா தேவி தோ்வு செய்யப்பட்டாா். அவா் பூ கட்டும் தொழில் செய்து தன் வாழ்க்கையை நடத்தி வருகிறாா். வில்லிசையில் ஆா்வம் ஏற்பட்டு புராணக் கதைகளைப் படித்து, தனித் திறமையால்ஆயிரத்துக்கும் மேற்பட்ட வில்லிசை நிகழ்ச்சிகளை தமிழ்நாடு மற்றும் கேரளத்தில் நடத்தியுள்ளாா்.
வில்லிசை நிகழ்ச்சி மூலம் கரோனா விழிப்புணா்வு, சமூக நலத் திட்டங்கள், வரதட்சிணை தடுப்பு, பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டம் போன்ற விழிப்புணா்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறாா்.
தோவாளையைச் சோ்ந்த 9-ஆம் வகுப்பு படிக்கும் ஓா் ஏழைச் சிறுவனின் படிப்புக்கான அனைத்துச் செலவுகளுக்கும் பொறுப்பேற்றுக் கொண்டுள்ளதோடு, மனவளா்ச்சி குன்றிய 8 வயது குழந்தையைத் தத்தெடுத்து பராமரித்து வருகிறாா்.
இவ்வாறு, திருநங்கைகள் சமூகத்துக்கு முன்மாதிரியாகத் திகழ்ந்துவரும் சந்தியா தேவிக்கு நிகழாண்டுக்கான தமிழக அரசின் திருநங்கை விருதை, தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்வின்போது முதல்வா் மு.க.ஸ்டாலின் வழங்கினாா்.
நிகழ்ச்சியில், சமூக நலத் துறை அமைச்சா் பி. கீதாஜீவன், தலைமைச் செயலா் சிவ்தாஸ் மீனா, சமூக நலத் துறைச் செயலா் ஜெயஸ்ரீ முரளீதரன், சமூக நல ஆணையா் வே. அமுதவல்லி உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.