சாலைகளில் மாடுகள் உலாவினால் உரிமையாளர்களுக்கு ரூ.10,000 விதிக்க தீர்மானம்!

சாலைகளில் மாடுகள் உலாவினால் உரிமையாளர்களுக்கு ரூ.10,000 விதிக்க தீர்மானம்!

சாலைகளில் உலாவும் மாடுகள்: உரிமையாளர்களுக்கு ரூ.10,000 அபராதம்!
Published on

சென்னை மாநகராட்சிக்குட்பட்ட சாலைகளில் மாடுகளை திரிய விட்டால் அந்த மாடுகள் பிடிக்கப்பட்டு, மாட்டின் உரிமையாளருக்கு அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் இதனைப் பொருட்படுத்தாமல், மாநகரில் பல இடங்களிலும் மாடுகள் சாலைகளில் திரிந்துகொண்டிருப்பதைக் காண முடிகிறது.

இதனால் சாலைகளில் நடந்து செல்லும் பயணிகளும், அதிலும் குறிப்பாக பள்ளிக் குழந்தைகளும், பெண்களும் ஒருவித அச்சத்துடனேயே பயணிக்க வேண்டியுள்ளது. அதேபோல, சாலைகளின் குறுக்கே சர்வ சாதாரணமாக உலா வரும் மாடுகளால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகியுள்ளனர்.

நிகழாண்டில் மட்டும், சென்னை மாநகராட்சிக்குட்பட்ட சாலைகளில் சுற்றி திரிந்த 1,100க்கும் மேற்பட்ட மாடுகள் பிடிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில், சென்னையில் சாலைகளில் சுற்றித்திரியும் மாடுகளுக்கான அபராதத் தொகை ஐந்தாயிரத்தில் இருந்து பத்தாயிரம் ரூபாயாக உயர்த்தப்படவுள்ளது. சென்னை மேயர் பிரியா தலைமையில் நடைபெற்ற மாமன்ற கூட்டத்தில் மேற்கண்ட தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

அதன்படி, சாலைகளில் உலாவும் மாடுகள் பிடிக்கப்பட்டு, அதன் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்படுவது முதன்முறையெனில் ரூ. 10,000மும், 2-வது முறையாக அபராதம் விதிக்கப்படுவதெனில் ரூ. 15,000 அபராதத் தொகை செலுத்த வேண்டும்.

மேலும், பிடிக்கப்படும் மாடுகளின் உரிமையாளர்கள் 2 நாள்களுக்குள் மாடுகளை அழைத்துச் செல்லாவிட்டால், 3-ஆம் நாளிலிருந்து மாடுகளின் பராமரிப்பு செலவுக்காக ரூ. 1,000 கூடுதலாக வசூலிக்கப்படும் என்று அந்த தீர்மானத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், சென்னையில் தொழில் வரியை 35 சதவிகிதம் உயர்த்தவும் மாமன்ற கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. தொழில்வரி உயர்வை அங்கீகரிக்க, அடுத்தகட்டமாக அரசுக்கு முன்மொழிவு அனுப்பப்பட உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com