பள்ளி, கல்லூரிகள் திறப்பு! மாநகரப் பேருந்துகளில் கதவுகள்!

இதுவரை 448 பேருந்துகளில் தானியங்கி கதவுகள் பொருத்தப்பட்டுள்ளன.
கோப்புப் படம்
கோப்புப் படம்
Published on
Updated on
1 min read

கோடை விடுமுறை முடிந்து பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படுவதையொட்டி மாநகரப் பேருந்துகளில் தானியங்கி கதவுகள் பொருத்தும் பணி நடைபெற்று வருகிறது.

மாணவர்கள் ஆபத்தான முறையில் படியில் நின்று பயணம் செய்வதைத் தவிர்க்கும் வகையில், இந்த தானியங்கிக் கதவுகள் பொருத்தப்பட்டு வருகின்றன.

மாநகரப் பேருந்துகளில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் படியில் நின்றபடியும், கம்பிகளில் தொங்கியபடியும் பயணம் செய்வதும் வாடிக்கையாகி வருகிறது. இதனால் விபத்துகள் நேரிடுவதால், அதனைத் தவிர்க்க மாநகரப் போக்குவரத்து கழகம் சார்பில் இந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

இதற்காக தானியங்கி கதவுகள் இல்லாத 468 பேருந்துகள் மாநகர போக்குவரத்து கழகம் சார்பில் தேர்வு செய்யப்பட்டுள்ளன. மாநிலக் கல்லூரி, நந்தனம் கல்லூரி போன்ற முக்கிய கல்வி நிலையங்களை இணைக்கும் சாலைகளில் இயங்கும் ( பேருந்து வழித்தட எண் 23சி, 29) பேருந்துகளில் தானியங்கி கதவுகள் பொருத்தப்படுகின்றன.

இதுவரை 448 பேருந்துகளில் தானியங்கி கதவுகள் பொருத்தப்பட்டுள்ளன. எஞ்சியுள்ள பேருந்துகளில் இந்த வாரத்தில் கதவுகள் பொருத்தி முடிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாணவர்கள் படிக்கட்டுகளில் நின்று பயணிக்காதவாறு கண்காணிக்க வேண்டும் என்றும் அவ்வாறு செய்தால், பேருந்தை நிறுத்திவிடவும் போக்குவரத்து ஊழியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டிருந்தது. சில நேரங்களில் பேருந்தின் மேற்கூரை மீது மாணவர்கள் ஏறுவதும், ஜன்னல் கம்பிகளில் தொங்கியவாறு பயணிப்பதும் உண்டு, அந்த சமயங்களில் காவல் துறையில் புகாரளிக்கவும் முன்பு அறிவுறுத்தப்பட்டிருந்தது.

ஆனால், பணியிடையே எல்லா நேரங்களிலும் காவல் துறையிடம் தெரிவிப்பது சாத்தியமில்லாத ஒன்று. சில நேரங்களில் தாக்குதல் போன்ற சம்பவங்களில் மாணவர்களின் செயல்களுக்கு எதிர்வினையாற்ற முடியாத நிலை நடத்துனர்களுக்கு ஏற்படுகிறது. காவல் நிலையத்திற்குச் சென்றாலும், வெறும் எச்சரிக்கையுடன் மாணவர்கள் விடுவிக்கப்படுகின்றனர்.

இந்த சிக்கல்களைக் களையும் வகையில், பேருந்துகளில் தானியங்கி கதவுகள் பொருத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

மாநகரப் போக்குவரத்து கழகத்திற்குட்பட்ட 3,200 பேருந்துகளில் 2,000 பேருந்துகளில் தானியங்கி கதவுகள் உள்ளன. 900 பேருந்துகள் 15 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கி வருவதால், அவை பழுது பார்த்து சீர் செய்யப்படவுள்ளன.

2022 - 23ஆம் ஆண்டில் மட்டும் 117 பேருந்து விபத்துகள் நேரிட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com