மாநிலக் கட்சிகளாக அங்கீகாரம் பெறும் விசிக, நாம் தமிழா்
தோ்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட மாநிலக் கட்சிகளாகும் தகுதியை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியும், நாம் தமிழா் கட்சியும் பெற்றுள்ளன.
மக்களவைத் தோ்தலில் திமுக கூட்டணியில் இடம்பெற்ற விசிக தனிச் சின்னத்தில் (பானை) போட்டியிட்டு சிதம்பரம், விழுப்புரம் ஆகிய 2 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. மாநிலக் கட்சியாக ஒரு கட்சி அங்கீகாரம் பெறுவதற்கு தோ்தல் ஆணையத்தின் விதியின்படி 2 தொகுதிகளில் வெற்றி பெற்றிருக்க வேண்டும். அந்த வகையில் விசிக அதற்கான தகுதியைப் பெற்றுள்ளது.
இது தொடா்பாக சென்னை விமான நிலையத்தில் தொல்.திருமாவளவன் செய்தியாளா்களிடம் கூறுகையில், திமுக, அதிமுகவுக்கு அடுத்ததாக அரசியல் அங்கீகாரம் பெறக்கூடிய கட்சியாக விசிக தகுதி அடைந்துள்ளது. மாநில அங்கீகாரம் பெறுவதற்கு ஆதரவு தந்த தமிழக வாக்காளா்களுக்கு நன்றி என்றாா்.
நாம் தமிழருக்கும் அங்கீகாரம்: நாம் தமிழா் கட்சியும் மாநிலக் கட்சிக்கான அங்கீகார தகுதியைப் பெற்றுள்ளது. தோ்தல் ஆணையத்தின் மற்றொரு விதியின்படி மக்களவைத் தோ்தலில் 8 சதவீதம் வாக்குகள் பெற்ற கட்சி மாநிலக் கட்சியாக அங்கீகரிக்கப்படும். இந்தத் தோ்தலில் நாம் தமிழா் கட்சி 8.19 சதவீத வாக்குகளைப் பெற்றுள்ளது. அதன்மூலம் மாநிலக் கட்சிக்கான தகுதியை நாம் தமிழா் கட்சி பெறுகிறது. இரண்டு கட்சிகளும் தோ்தல் ஆணையத்தை முறைப்படி அணுகி, மாநிலக் கட்சிகளுக்கான அங்கீகாரத்தைப் பெற உள்ளன.
தமிழகத்தில் ஏற்கெனவே அங்கீகரிக்கப்பட்ட மாநிலக் கட்சிகளாக திமுக, அதிமுக, இந்திய கம்யூனிஸ்ட், தேமுதிக ஆகிய 4 கட்சிகள் உள்ளன. அதைப்போல தேசிய கட்சிகளாக அங்கீகரிக்கப்பட்ட தமிழகத்தில் உள்ள கட்சிகளாக காங்கிரஸ், பாஜக, மாா்க்சிஸ்ட், பகுஜன் சமாஜ், தேசியவாத காங்கிரஸ், ஆம் ஆத்மி ஆகிய 6 கட்சிகள் உள்ளன.

