அரசுப் பேருந்து ஓட்டுநர்
அரசுப் பேருந்து ஓட்டுநர்DOTCOM

நான்குநேரி செல்ல வேண்டாம் என அப்பாவு கூறினாரா? அரசுப் பேருந்து ஓட்டுநர் விடியோ வைரல்

நான்குநேரிக்கு சில தடம் எண் கொண்ட அரசுப் பேருந்துகள் செல்ல வேண்டாம் என்று அப்பாவு கூறியதாக விடியோ வைரல்.
Published on

நான்குநேரிக்கு அரசுப் பேருந்து செல்ல வேண்டாம் என்று பேரவைத் தலைவர் அப்பாவு கூறியதாக ஓட்டுநர் பேசும் காணொலி வெளியாகியுள்ளது.

நெல்லை - நாகர்கோவில் வழித்தடத்தில் உள்ள பல்வேறு ஊர்களுக்குள் செல்லாமல் புறவழிச் சாலை வழியாக அரசுப் பேருந்துகள் செல்வதாக அப்பகுதியினர் பல ஆண்டுகளாக புகார் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் புதன்கிழமை(ஜூன் 5) இரவு, நெல்லை புதிய பேருந்து நிலையத்திலிருந்து நாகர்கோவில் சென்ற அரசுப் பேருந்தில் நான்குநேரி செல்லும் பயணிகளை ஏற்ற ஓட்டுநர் மறுத்துள்ளார்.

அப்போது அரசுப் பேருந்து ஓட்டுநருக்கும் பயணிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அதில் ஒரு பயணி நான்குநேரிக்கு போகாதது குறித்து அரசு பேருந்து ஓட்டுநரிடம் கேள்வி கேட்கும்போது, சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு மற்றும் வள்ளியூர் வணிகர் சங்கம் இணைந்து முடிவெடுத்து, நாங்குநேரிக்கு அரசு பேருந்துகள் செல்ல வேண்டாம் எனக் கூறியதாக தெரிவித்தார்.

நான்குநேரி சட்டப்பேரவைத் தொகுதியாகவும், தாலுகாவின் தலைநகராகவும் உள்ளது. மாவட்ட நீதிமன்றம், மருத்துவமனை, காவல் நிலையம் என்று பல்வேறு சேவைகளை பயன்படுத்த நாங்குநேரிக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கானோர் வந்துசெல்கின்றனர்.

இந்த நிலையில், அனைத்துப் பேருந்துகளும் நான்குநேரிக்குள் வந்துசெல்ல வேண்டும் என்ற அரசு உத்தரவும், உயர்நீதிமன்ற சிறப்பு உத்தரவு இருந்தும், அதனை மதிக்காமல் அரசுப் போக்குவரத்துக் கழகம் இருப்பதாக அப்பகுதி மக்கள் குற்றச்சாட்டு எழுப்பியுள்ளனர்.

கடந்த சில நாள்களுக்கு முன்னதாக, நான்குநேரி பேருந்தில் காவலர், நடத்துனருக்கு இடையே ஏற்பட்ட பிரச்னை மாநிலம் முழுவதும் வெடித்த நிலையில், அரசு அதிகாரிகளின் தலையீட்டால் சமரசம் செய்யப்பட்டது.

இந்த நிலையில், ஊருக்குள் பேருந்தை இயக்க வேண்டாம் என்று அப்பாவு கூறியதாக ஓட்டுநர் கூறிய விடியோ தற்போது வைரலாகி வருகின்றது.

ஏற்கெனவே, நான்குநேரிக்கு அறிவிக்கப்பட்ட மாவட்ட மருத்துவமனையை சட்டப்பேரவைத் தலைவர் தலையிட்டு அவரது ராதாபுரம் தொகுதிக்குள்பட்ட வள்ளியூருக்கு கொண்டு சென்றதால் மக்கள் அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com