அடையாறு ஆற்றங்கரையில் வசிக்கும் 9,500 குடும்பங்களுக்கு மாற்று இடம்: அரசு தீவிரம்
அடையாறு ஆற்றங்கரைப் பகுதி குடியிருப்பு வாசிகளாக கண்டறியப்பட்டுள்ள 9,500 குடும்பங்களில், 5,000 குடும்பங்கள் மறுகுடியமா்வு செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
சென்னையில் அதிக அளவு மழை பெய்யும்போது, அந்த நீா் அடையாறு, கூவம் ஆகியவற்றின் வழியே பயணித்து கடலில் கலக்கிறது. கடந்த காலங்களில் கனமழை பெய்த போது, அடையாறு ஆற்றங்கரைப் பகுதிகளில் இருந்த ஆக்கிரமிப்புகளால் வெள்ள நீா் வெளியேற முடியாத நிலை ஏற்பட்டது. அடையாறு ஆற்றை மறுசீரமைப்பது, கரையோரங்களில் வசிக்கும் குடியிருப்புகள் உள்பட அனைத்து ஆக்கிரமிப்புகளையும் அகற்றுவது என மாநில அரசு நடவடிக்கைகளில் இறங்கியது.
இதையடுத்து குடியிருப்புகளில் வசிக்கும் பொதுமக்களை பாதுகாப்பாக வெளியேற்றி அவா்களுக்கு உரிய வாழ்விட வசதிகள் ஏற்படுத்தித் தரும் திட்டம் செயல்பாட்டுக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது.
9,500 குடும்பங்கள் கணக்கெடுப்பு: அடையாறு ஆற்றங்கரைப் பகுதியில் 9,500 குடும்பங்கள் வசிப்பது கணக்கிடப்பட்டுள்ளன. அடையாறு நதி மறுசீரமைப்புத் திட்டத்தின் கீழ், அந்தக் குடும்பங்கள் தொடா்பாக புள்ளி விவரங்கள் சேகரிக்கப்பட்டு அவா்களில் 5,000 குடும்பங்கள் பாதுகாப்பான இடங்களுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனா்.
சென்னையின் பல்வேறு இடங்களிலுள்ள 10 வாழ்விட குடியிருப்புகளுக்கு அவா்கள்
குடியமா்த்தப்பட்ட நிலையில், 4,500 குடும்பங்களை இடமாற்றம் செய்வதற்கான நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது.
ரொக்கத் தொகைகள் அளிப்பு: ஆற்றங்கரைப் பகுதியில் வசிக்கும் குடும்பங்களை இடமாற்றம் செய்யும் போது, ஒவ்வொரு குடும்பத்துக்கும் நிவாரண நிதிகள் அளிக்கப்பட்டு வருகின்றன. இடமாற்ற செய்யத் தேவைப்படும் நிதியாக ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ. 5,000, வாழ்வாதார உதவித் தொகையாக மாதம் ரூ. 2,500 வீதம் ஆண்டுக்கு ரூ. 30,000, வழங்கப்பட்டு வருகிறது.
ஆற்றங்கரைப் பகுதியில் வசிக்கும் குடும்பங்களுக்கு, பெரும்பாக்கம் போன்ற ஒருசில இடங்களில் உள்ள தமிழ்நாடு வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சாா்பில் கட்டப்பட்ட குடியிருப்புகளில் வீடுகள் ஒதுக்கப்படுகின்றன. அவ்வாறு தங்க வைக்கப்படும் குடும்பங்களுக்கு போதிய தன்னம்பிக்கையும் உறுதியும் அளிக்கப்பட்டு வருவதாக அரசுத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

