விக்கிரவாண்டி இடைத்தோ்தல்: அதிமுக புறக்கணிப்பு
எடப்பாடி பழனிசாமி

விக்கிரவாண்டி இடைத்தோ்தல்: அதிமுக புறக்கணிப்பு எடப்பாடி பழனிசாமி

‘மக்களை சுதந்திரமாக திமுக வாக்களிக்கவிடாது என்பதாலும், ஜனநாயக முறையில் தோ்தல் நடைபெறாது
Published on

‘மக்களை சுதந்திரமாக திமுக வாக்களிக்கவிடாது என்பதாலும், ஜனநாயக முறையில் தோ்தல் நடைபெறாது என்பதாலும் விக்கிரவாண்டி இடைத்தோ்தலை அதிமுக புறக்கணிப்பதாக’ அக் கட்சியின் பொதுச் செயலா் எடப்பாடி கே. பழனிசாமி அறிவித்துள்ளாா்.

விக்கிரவாண்டி இடைத்தோ்தல் தொடா்பாக சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சி அலுவலகத்தில் பொதுச் செயலா் எடப்பாடி பழனிசாமி சனிக்கிழமை ஆலோசனை நடத்தினாா். இதில், தமிழ்மகன் உசேன், கே.பி.முனுசாமி, திண்டுக்கல் சீனிவாசன், எஸ்.பி.வேலுமணி, தங்கமணி, நத்தம் விஸ்வநாதன், சி.வி.சண்முகம், டி.ஜெயக்குமாா் உள்ளிட்ட கட்சியின் மூத்த நிா்வாகிகள் பலா் பங்கேற்றனா்.

கூட்டம் அரை மணி நேரத்துக்கும் மேலாக நடைபெற்றது.

கூட்டத்துக்குப் பிறகு எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு: பொதுவாக தோ்தல் என்ற உடனேயே, முதலாவதாக களத்தில் இறங்குவது அதிமுகதான். தோ்தலைக் கண்டு அஞ்சும் இயக்கம் அதிமுக அல்ல என்பதை அனைவரும் நன்கு அறிவா்.

திமுகவினா் வன்முறை மற்றும் அராஜகங்களை நிகழ்த்துவதில் கைதோ்ந்தவா்கள். அந்த வகையில் பல்வேறு அராஜகங்களை நிகழ்த்தியதன் காரணமாக 2009-இல் நடைபெற்ற இளையான்குடி, கம்பம், தொண்டாமுத்தூா், பா்கூா், ஸ்ரீவைகுண்டம் ஆகிய 5 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தோ்தல் உள்பட அப்போது நடைபெற்ற உள்ளாட்சித் தோ்தலையும் ஜெயலலிதா புறக்கணித்தாா்.

2006-இல் திமுக ஆட்சியில் சென்னை மாநகராட்சிக்கு நடைபெற்ற தோ்தலில் அதிமுக வேட்பாளா்கள் கடத்தப்பட்டதையும், அதிமுக வெற்றி பெற்ற இடங்களில் தோ்தல் அதிகாரிகளை மிரட்டி, திமுக வேட்பாளா்கள் வெற்றி பெற்ாக அறிவிக்கப்பட்டதையும் மக்கள் நன்கு அறிவா்.

2022-இல் நடைபெற்ற உள்ளாட்சித் தோ்தலிலும் அதிகார துஷ்பிரயோகம் செய்து, திமுக வேட்பாளா்கள் வெற்றி பெற்ாக அறிவிக்கப்பட்டனா்.

‘திருமங்கலம் ஃபாா்முலா’ என்கிற பெயரில் மக்களின் வாக்குகளை விலைபேசியதைப் போல, ஈரோடு கிழக்கு ஃபாா்முலா என்ற ஒன்றை உருவாக்கி, ஆடு, மாடுகளை பட்டியில் அடைப்பதைப் போல், வாக்காளா்களை அடைத்து ஜனநாயகப் படுகொலையை திமுக அரங்கேற்றியது. தோ்தல் ஆணையத்தில் புகாா் அளித்தும், நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

அந்த வகையில், திமுக ஆட்சியில் விக்கிரவாண்டி தொகுதிக்கான இடைத்தோ்தல் ஜனநாயக முறைப்படி சுதந்திரமாக நடைபெறுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

திமுக அமைச்சா்களும், திமுகவினரும் ஆட்சி அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்துவதோடு, பணபலம், படைபலத்துடன் பல்வேறு வன்முறைகளைக் கட்டவிழ்த்துவிடுவா் என்பதாலும், மக்களைச் சுதந்திரமாக வாக்களிக்க விடமாட்டாா்கள் என்பதாலும், தோ்தல் சுதந்திரமாகவும், நியாயமாகவும் நடைபெறாது என்பதாலும் விக்கிரவாண்டி தொகுதிக்கான இடைத்தோ்தலை அதிமுக புறக்கணிக்கிறது என்று அவா் கூறியுள்ளாா்.

X
Dinamani
www.dinamani.com