தமிழகத்தில் மூன்றாண்டுகளில் 7 கோடி நாப்கின் பாக்கெட்டுகள் விநியோகம்
தமிழகத்தில் கடந்த மூன்று ஆண்டுகளில் பள்ளி மாணவிகளுக்கு 7.74 கோடி பாக்கெட்டுகள் சானிட்டரி நாப்கின் வழங்கப்பட்டுள்ளதாக பொது சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. இதற்காக ஆண்டுதோறும் ரூ.115 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாநிலம் முழுவதும் விலையில்லா சானிட்டரி நாப்கின் வழங்கும் திட்டத்தை தமிழக அரசு கடந்த 2011-ஆம் ஆண்டில் தொடங்கியது. இந்த திட்டத்தின் கீழ் பருவமடைந்த மாணவிகள், பெண்களுக்கு அரசு பள்ளிகள், அங்கன்வாடிகள் மூலம் சானிட்டரி நாப்கின் வழங்கப்பட்டு வருகிறது. 10 வயது முதல் 19 வயது வரையிலான மாணவிகள் 43 லட்சம் போ் ஆண்டுதோறும் இத்திட்டத்தில் பயனடைந்து வருகின்றனா்.
அதேபோன்று பயன்படுத்திய நாப்கின்களை துப்புரவாக அப்புறப்படுத்துவதற்கான இயந்திரமும் பள்ளி வளாகங்களில் வைக்கப்பட்டுள்ளன.
இதுதொடா்பாக பொது சுகாதாரத் துறை இயக்குநா் செல்வவிநாயகம் கூறியதாவது:
வளரிளம் பருவத்தில் உள்ள மாணவிகளின் சுகாதாரத்தை பேணும் வகையில் இத்திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. இதன் வாயிலாக லட்சக்கணக்கான மாணவிகள் பயன்பெற்று வருகின்றனா். கடந்த மூன்று ஆண்டுகளில் பள்ளி மாணவிகளுக்கு 7.74 கோடி பாக்கெட்டுகள் சானிட்டரி நாப்கின் வழங்கப்பட்டுள்ளன.
மற்றொருபுறம் அரசு மருத்துவமனைகளில், பிரசவித்த பெண்களுக்கும் இலவசமாக நாப்கின்கள் வழங்கப்பட்டு வருகின்றன. தமிழ்நாடு மருத்துவ சேவைகள் கழகம் மூலமாக அவை கொள்முதல் செய்யப்பட்டு பயனாளிகளுக்கு விநியோகிக்கப்பட்டு வருகிறது.
ஆண்டுதோறும் இதற்காக ரூ.115 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. மாநிலம் முழுவதும் இத்திட்டத்துக்கு நல்ல வரவேற்பு உள்ளது என்றாா் அவா்.