
பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு தூத்துக்குடி ஈத்கா மைதானத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற சிறப்புத் தொழுகையில் ஆயிரக்கணக்கான இஸ்லாமியர் பங்கேற்றனர்.
இறைதூதர் இப்ராஹீம் தியாகத்தை போற்றும் வகையில் தியாகத்திருநாளான பக்ரீத் பண்டிகை இஸ்லாமியரால் கொண்டாடப்பட்டு வருகிறது. இப்பண்டிகையை முன்னிட்டு தூத்துக்குடியில் உள்ள ஈத்கா மைதானத்தில் சிறப்பு தொழுகை நடைபெற்றது. இதில், தூத்துக்குடி ஜாமியா பள்ளிவாசல் தலைமை இமாம் அப்துல் ஆழிம் தலைமை வகித்தார். மாவட்ட அரசு காஜி முஜிபுர் ரகுமான் உலக நன்மைக்காக சிறப்பு பிரார்த்தனை செய்தார்.
இதில், ஜாமியா பள்ளிவாசல் நிர்வாக சபை தலைவர் மிராசா மரைக்காயர், துணைத்தலைவர் சிராஜுதீன், செயலர் எம்.எஸ்.எஃப். ரகுமான், பொருளாளர் மூஸா உள்ளிட்ட ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் பங்கேற்று அன்பு சகோதரத்துவம் உலக அமைதி வேண்டி சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர். தொழுகைக்குப் பின் ஒருவருக்கு ஒருவர் ஆறத் தழுவி வாழ்த்து தெரிவித்துக் கொண்டனர்.
இதைத்தொடர்ந்து இஸ்லாமியர்கள் தங்கள் வீடுகளுக்கு சென்று ஆடுகளை குருபானி கொடுத்து, அதை 3 பங்காக பிரித்து ஒன்று உறவினருக்கும், ஒன்று ஏழைகளுக்கும், ஒன்று தனக்கும் என பிரித்து வழங்கினர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.