கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்ததால் உடல்நலம் பாதிக்கப்பட்டு பெண்கள் உள்பட 35 பேர் உயிரிழந்த சம்பவத்தில், பலியானோர் குடும்பத்துக்கு தலா ரூ.1 லட்சம் வழங்கப்படும் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து உடல்நலம் பாதிக்கப்பட்டு பெண்கள் உள்பட 35 பேர் உயிரிழந்தனர். மேலும், 70-க்கும் மேற்பட்டோர் கள்ளக்குறிச்சி, சேலம் உள்ளிட்ட பல்வேறு மாவட்ட மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த நிலையில், கள்ளக்குறிச்சி சென்ற அண்ணாமலை, கள்ளச்சாராயம் குடித்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவோரை நேரில் சந்தித்து, அவர்களது உடல்நலம் குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார்.
பிறகு, செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை, கள்ளச்சாராய சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மத்திய அரசின் திட்டங்கள் மூலம் நிதி உதவி கிடைக்க உதவி செய்யப்படும். கள்ளச்சாராய விற்பனையை தடுக்கத் தவறியதற்காக அமைச்சர் முத்துசாமி பதவி விலக வேண்டும்.
கள்ளச்சாராய சம்பவத்துக்கு முடிவுகட்ட முதல்கட்டமாக 1000 டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என்ற அறிவிப்பை தமிழக முதல்வர் ஸ்டாலின் வெளியிட வேண்டும்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் கிராமத்தில், கள்ளச்சாராய உயிரிழப்புகள் குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தன்னிடம் கேட்டறிந்தார் என்றும் அவர் கூறினார்.
கள்ளச்சாராயமும், திமுகவும் பின்னிப்பிணைந்துள்ளன. ஒவ்வொரு ஆண்டும் டாஸ்மாக் விற்பனை 20 சதவீதம் அதிகரித்து வருகிறது. முதல்வர் ஸ்டாலின், கள்ளக்குறிச்சிக்கு நேரில் வராதது ஏன்? என்றும் அண்ணாமலை கேள்வியெழுப்பியிருக்கிறார்.
கள்ளச்சாராய சம்பவம் தொடர்பாக கள்ளக்குறிச்சி காவல் ஆய்வாளர் ரு.ஆனந்தன் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். முதற்கட்ட விசாரணையின் அடிப்படையில் கள்ளச்சாராய வியாபாரிகள் கன்னுக்குட்டி (எ) கோவிந்தராஜ், அவரது மனைவி விஜயா, தாமோதரன் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
முன்னதாக, அண்ணாமலை தன்னுடைய எக்ஸ் வலைதளப் பதிவில், கள்ளக்குறிச்சியில், கள்ளச்சாராயத்தினால் 35க்கும் அதிகமான உயிர்கள் பறிபோயிருக்கின்றன என்ற செய்தி மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அளிக்கிறது. கள்ளக்குறிச்சிக்கு நேரில் சென்று, உயிரிழந்தவர்கள் குடும்பத்தினரையும், மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்களையும் சந்தித்து ஆறுதல் தெரிவிக்க உள்ளோம். அவர்கள் குடும்பத்தினருக்கு தமிழக பாஜக எப்போதும் உறுதுணையாக இருக்கும்.
தமிழகம் முழுவதும் கள்ளச்சாராய விற்பனையைத் தடுக்காமல், பல உயிர்கள் பலியாகும் வண்ணம், தொடர்ந்து மெத்தனப் போக்கில் செயல்பட்டு வரும் திமுக அரசின் கையாலாகாத்தனத்தைக் கண்டித்து, வரும் ஜூன் 22 அன்று, தமிழக பாஜக சார்பாக, மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது என்பதை அறிவித்துக் கொள்கிறேன்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.