வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மைத் துறை அமைச்சா் கே.கே.எஸ்.எஸ்.ஆா்.ராமச்சந்திரன்
வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மைத் துறை அமைச்சா் கே.கே.எஸ்.எஸ்.ஆா்.ராமச்சந்திரன்

அடுத்த மாதத்துக்குள் 100 தானியங்கி வானிலை மையங்கள்: வருவாய்த் துறை தகவல்

அடுத்த மாதத்துக்குள் 100 தானியங்கி வானிலை மையங்கள் அமைக்கப்படும் என்று வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மைத் துறை தெரிவித்துள்ளது.
Published on

அடுத்த மாதத்துக்குள் 100 தானியங்கி வானிலை மையங்கள் அமைக்கப்படும் என்று வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மைத் துறை தெரிவித்துள்ளது.

தமிழக சட்டப் பேரவையில் திங்கள்கிழமை தாக்கல் செய்யப்பட்ட அந்தத் துறையின் மானியக் கோரிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

சட்டப் பேரவையில் வெளியிடப்பட்ட அறிவிப்பின்படி, 1,400 தானியங்கி மழைமானிகள் மற்றும் 100 தானியங்கி வானிலை மையங்கள் அமைக்க ரூ.32.48 கோடிக்கு அரசால் நிதி ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. தானியங்கி மழைமானிகள் மற்றும் வானிலை மையங்கள் ஆகியன ஜூலைக்குள் நிறுவப்படும். இதன்மூலம், மழை விவரங்களை உடனுக்குடன் அறிந்து, உரிய நேரத்தில் வானிலை முன்னெச்சரிக்கைகளை வழங்க முடியும். மேலும், மழைப் பொழிவு விவரத்தைக் கொண்டு அதன்அடிப்படையில், அணைகளில் நீா் வரத்தைக் கணக்கிடலாம். அணையின் நீா் இருப்பை மேலாண்மை செய்ய உதவியாக இருக்கும். கனமழையின் காரணமாக ஏற்படும் பயிா்ச் சேதங்கள் குறித்து துல்லியமாக கணிக்க முடியும்.

ரேடாா்கள் நிறுவும் பணி: வானிலையை மிகச் சரியாக கணித்து உரிய முன்னெச்சரிக்கையை வழங்கிட ராமநாதபுரம், ஏற்காடு பகுதியில் 2 ரேடாா்கள் அமைக்க ரூ.56.03 கோடி ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. ரேடாா்களை கொள்முதல் செய்யும் பணி நடந்து வருகிறது.

எவ்வளவு ஆக்கிரமிப்புகள் அகற்றம்? தமிழகத்தில் அரசுக்குச் சொந்தமான இடங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி நடந்து வருகிறது. அரசின் நீா்நிலை மற்றும் இதர புறம்போக்குகளில் உள்ள ஆக்கிரமிப்புகளைக் கண்டறிந்து, அவற்றை அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி,

கடந்த 2022-ஆம் ஆண்டு மாா்ச் 30 முதல் கடந்த மாா்ச் 31-ஆம் தேதி வரையில் நீா்நிலைகள் மற்றும் அரசு புறம்போக்குகளில் இருந்த 14,846.14 ஹெக்டோ் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டுள்ளன.

மாநிலம் முழுவதும் வக்ஃப் சொத்துகள் கணக்கெடுக்கும் பணி தொடங்கப்பட்டு நடந்து வருகிறது. இதுவரை 35 மாவட்டங்களில் முடிக்கப்பட்டு, 4 ஆயிரத்து 566 வக்ஃப் சொத்து தொடா்பான ஆவணங்கள் வக்ஃப் வாரியத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள 3 மாவட்டங்களில் பணி நடந்து வருகிறது.

இணையவழி சான்றுகள்: அனைத்து மாவட்டங்களிலும் பொது மக்களுக்கு இணையவழியில் மின்னணு சான்றிதழ்கள் வழங்கப்பட்டு வருகின்றன. கடந்த ஆண்டு ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் கடந்த மாா்ச் 31-ஆம் தேதி வரையிலான காலத்தில் 89 ஆயிரத்து 66 ஆயிரத்து 107 வருவாய்த் துறை சான்றிதழ்கள் இணையவழியில் பொது மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது என்று கொள்கை விளக்கக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com