கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம்! உறக்கத்திலேயே உயிரிழந்த 13 பேர்!

கள்ளச்சாராயம் குடித்த 13 பேர் உறக்கத்தில் உயிரிழந்த அதிர்ச்சி
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம்! உறக்கத்திலேயே உயிரிழந்த 13 பேர்!
Published on
Updated on
1 min read

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் அருந்தி இறந்தவர்களில் 13 பேர் உறக்கத்திலேயே உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கள்ளக்குறிச்சி காவல் நிலையம் மற்றும் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தின் பின்பகுதியிலுள்ள கருணாபுரம் பகுதியில் ஜூன் 18-ஆம் தேதி துக்க நிகழ்வுக்கு வந்தவர்கள் கள்ளச்சாராயம் அருந்தியதால் பாதிக்கப்பட்டு, கள்ளக்குறிச்சி, புதுச்சேரி, சேலம், விழுப்புரம் அரசு மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டனர்.

இவர்களில், இதுவரை 57 பேர் இறந்துள்ளனர். மேலும் 148 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். உயிரிழந்தவர்கள் கருணாபுரம், கள்ளக்குறிச்சி நகரப் பகுதி, மாதவச்சேரி, சேஷசமுத்திரம், சிறுவங்கூர் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்தவர்களாவர். இதிலும், அதிகபட்சமாக 31 பேர் கருணாபுரத்தைச் சேர்ந்தவர்கள்.

இந்த நிலையில் கள்ளச்சாராயம் அருந்தி இறந்தவர்களில் 13 பேர் உறக்கத்திலேயே உயிரிழந்துவிட்ட செய்தி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்பவத்தன்று கள்ளச்சாராயம் அருந்தியவர்களில் 13 பேர் அவரவர் வீட்டிற்கு சென்று படுத்துள்ளனர். வீட்டில் இருப்பவர்கள் அவர்கள் தூங்குவதாக நினைத்து வழக்கம்போது வேலைக்குச் சென்று மாலை வீடு திரும்பியுள்ளனர்.

பின்னர் கள்ளச்சாராயம் குறித்த செய்தியை அறிந்த அவர்கள் உடனடியாக 13 பேரையும் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். ஆனால் அந்த 13 பேரும் மருத்துவமனைக்கு கொண்டு வரும் முன்னே உறக்கத்திலேயே இறந்துவிட்டனர் என்கிற அதிர்ச்சிகரமான தகவலை மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதனிடையே கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராய உயிரிழப்பு வழக்கு சிபிசிஐடி-க்கு மாற்றப்பட்டதைத் தொடர்ந்து, விசாரணை அலுவலரான கூடுதல் எஸ்.பி. கோமதி தலைமையிலான தனிப்படைக் குழுவினர், தீவிர விசாரணை நடத்தி, கைது நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழகத்தில் மிகப் பெரிய பாதிப்பை ஏற்படுத்திய சம்பவங்களுள் ஒன்றாக கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய உயிரிழப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com