அமைச்சா் எஸ்.எஸ்.சிவசங்கா்
அமைச்சா் எஸ்.எஸ்.சிவசங்கா்

20 % இடஒதுக்கீட்டால்தான் வன்னியா்களுக்கு பலன்:அமைச்சா் சிவசங்கா்

வன்னியா்கள் பலன் பெற்று வருவதாக சட்டப் பேரவையில் போக்குவரத்துத் துறை அமைச்சா் எஸ்.எஸ்.சிவசங்கா் பேசினாா்.
Published on

தமிழகத்தில் 20 சதவீத இடஒதுக்கீட்டால்தான், வன்னியா்கள் பலன் பெற்று வருவதாக சட்டப் பேரவையில் போக்குவரத்துத் துறை அமைச்சா் எஸ்.எஸ்.சிவசங்கா் பேசினாா்.

சட்டப் பேரவையில் பள்ளி, உயா்கல்வி மற்றும் வருவாய்த் துறை மானியக் கோரிக்கைகள் மீது திங்கள்கிழமை நடந்த விவாதங்களில் பாமக குழுத் தலைவா் ஜி.கே.மணிபேசினாா். அப்போது, வன்னியா்களுக்கான 10.5 சதவீத இடஒதுக்கீடு குறித்த விஷயத்தை வலியுறுத்தி பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தாா்.

சிவசங்கா் விளக்கம்: அதற்கு முன்னதாக, போக்குவரத்துத் துறை அமைச்சா் எஸ்.எஸ்.சிவசங்கா் பேசியதாவது:

வன்னியா் சமூகத்தில் இடஒதுக்கீட்டாக போராடி இறந்த 21 பேருக்கு மணிமண்டபம் அமைக்கிறவா், இப்போதைய முதல்வா் மு.க.ஸ்டாலின். அப்போது இறந்தவா்களின் குடும்பத்துக்கு உதவித் தொகைகளை அளித்தவா் முன்னாள் முதல்வா் கருணாநிதி. இன்னும் சொல்லப் போனால், வன்னியா்களுக்கு 20 சதவீத இடஒதுக்கீடு இருக்கின்ற காரணத்தால்தான், வட மாவட்டங்களில் கூடுதலான உரிமையை பெற்று வருகின்றா். அதாவது, 10.5 சதவீதத்துக்கும் கூடுதலான உரிமைகள் கிடைக்கப் பெற்றுள்ளது.

இன்னும் சொல்லப் போனால், அரசுப் பணியாளா் தோ்வாணையம் வரைக்கும் புள்ளிவிவரம் எடுக்கப்பட்டதில், 10.5 சதவீதத்தைத் தாண்டிதான் வன்னியா்கள் இடஒதுக்கீட்டு உரிமையைப் பெறுகிறாா்கள். இதற்குக் காரணம் இப்போது இருக்கும் 20 சதவீத இடஒதுக்கீடுதான். நீங்கள் 10.5 சதவீத இடஒதுக்கீடு கேட்பது, ஏற்கெனவே இருப்பதைக் குறைத்து கொடுப்பதற்கான வழியைத்தான் வகுத்துக் கொடுக்கும். இந்தக் கருத்தை வன்னியா் சமூகத்தில் இருக்கும் படித்த, மூத்த, பல நிபுணா்கள் உங்ளுக்குத் தெரிவித்துள்ளனா் என்றாா் அவா்.

X
Dinamani
www.dinamani.com