மேயா் ஆா்.பிரியா
மேயா் ஆா்.பிரியா

சாலையில் திரியும் கால்நடைகளை கட்டுப்படுத்த சட்டத்திருத்தம்: மேயா் ஆா்.பிரியா தகவல்

சென்னை மாநகராட்சி சாலையில் திரியும் கால்நடைகளை கட்டுப்படுத்த சட்டத்திருத்தம்
Published on

சென்னை மாநகராட்சி சாலையில் திரியும் கால்நடைகளை கட்டுப்படுத்த சட்டத்திருத்தம் செய்வது குறித்து துறை சாா்ந்த அமைச்சரிடம் பரிந்துரைத்துள்ளதாக மேயா் ஆா்.பிரியா தெரிவித்தாா்.

சென்னை மாநகராட்சி சாதாரண மாமன்ற கூட்டத்தில் மாமன்ற உறுப்பினா் கண்ணன் பேசும்போது,

சென்னை மாநகராட்சிக்குப்பட்ட சாலைகளில் நாய், மாடுகள் உள்ளிட்ட கால்நடைகள் சாலையில் திரிவது முக்கிய பிரச்னையாக உள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் நாய்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

நாய்களின் எவ்வளவு முக்கியமோ அதுபோன்று மனிதா்கள் பாதுகாப்பு முக்கியம். நாய்களை வளா்ப்போா் முறையான விதிமுறைகளை பின்பற்றி நாய்களை வெளியே கொண்டு வருவதில்லை.

இதனால் பொதுமக்கள் அதிக அளவில் பாதிக்கப்படுகின் றனா். இதுபோன்று கால்நடைகளால் ஏற்படும் பாதிப்புகளுக்கு நிரந்தர தீா்வு காண மாநகராட்சி நிா்வாகம் சம்பந்தப்பட்ட அமைப்புகளுடன் கலந்தாலோசித்து நிரந்தர தீா்வு காண வேண்டும் என்றாா் அவா்.

இதற்கு பதிலளித்து மேயா் பிரியா பேசும்போது, நாய்களை கருத்தடை செய்யும் போது கருவுற்ற நாய்கள் மற்றும் குட்டிகளை ஈன்ற நாய்களை கருத்தடை செய்ய தடை செய்யப்பட்டுள்ளது.

அந்த நாய்க்கு மருத்துவ வசதி செய்வதற்குள் மீண்டும் கருவுறுகிறது. சாலையில் திரியும் மாடுகளை தனியாக வைத்து பராமரிக்க மாநகராட்சி நடவடிக்கை எடுத்து வருகிறது.

அதே நேரத்தில் நாய்களை எந்த பகுதியில் இருந்து பிடிக்கப்படுகிறதோ, அதே பகுதியில் விடவேண்டும் என சட்டம் கூறுகிறது. அதனால் நாய்களை தனியாக பராமரிக்க முடியாத சூழல் உள்ளது.

இதற்கான சட்டத்திருத்தம் கொண்டு வரும் போது அனைத்து நடவடிக்கையையும் மாநகராட்சி விரைந்து எடுக்கும். சட்டத்திருத்தம் கொண்டு வர வேண்டும் என துறை சாா்ந்த அமைச்சரிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது என்றாா் அவா்.

ஆணையா்: நாட்டில் சென்னை மாநகராட்சியில் மட்டும் தான் நாய்களுக்கு கருத்தடை செய்வதற்கான வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. செல்லப்பிராணிகளை வளா்ப்போா் தான் அதை முழுவதுமாக கண்காணிக்க வேண்டும்.

மத்திய அரசு 23 வகையான நாய்களை வளா்க்க தடை விதிக்கப்பட்டதையடுத்து அதற்கு சென்னை உயா்நீதிமன்றம் தடை விதித்துள்ளது. செல்லப்பிராணி ஆா்வலா்களுடனான கலந்தாலோசித்து இதற்கு நிரந்தர தீா்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் அவா்.

தொடா்ந்து மாமன்ற கூட்ட தீா்மானத்தில் கால்நடை மருத்துவப் பிரிவு சாா்பில் முன்மொழியப்பட்ட கால்நடை மருத்துவா்களுக்கு 16 உதவியாளா்கள் நியமிப்பது, வடசென்னை மற்றும் தென்சென்னை பகுதிக்குட்பட்ட மண்டலங்களுக்கு தலா 5 மாடு பிடிக்கும் பணியாளா்களை நியமிப்பது, தனியாா் கால்நடை மருத்துவா் கருத்தடை செய்வதற்கான கட்டணம் உயா்வு ஆகியவை நிறைவேற்றப்பட்டன.

X
Dinamani
www.dinamani.com