கள்ளக்குறிச்சிக்கு மெத்தனால் வந்த வழி?

சென்னையில் பதுங்கியிருந்த மெத்தனால் விநியோகஸ்தர் கைது
கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனை முன்பு நிற்கும் அவசர ஊர்தி.
கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனை முன்பு நிற்கும் அவசர ஊர்தி.
Published on
Updated on
1 min read

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய உயிரிழப்பு வழக்கில் மெத்தனால் வாங்க உதவியதாக கடலூர் மாவட்டம், பண்ருட்டியைச் சேர்ந்த இரு வியாபாரிகள் உள்ளிட்ட மூவரை சிபிசிஐடி போலீஸார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராய உயிரிழப்பு வழக்கு சிபிசிஐடி-க்கு மாற்றப்பட்டதைத் தொடர்ந்து, விசாரணை அலுவலரான கூடுதல் எஸ்.பி. கோமதி தலைமையிலான தனிப்படைக் குழுவினர், தீவிர விசாரணை நடத்தி, கைது நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அதன்படி, கள்ளச்சாராயத்தை விற்பனை செய்த கண்ணுக்குட்டி (எ) கோவிந்தராஜ், அவரது மனைவி விஜயா, சகோதரர் தாமோதரன், முக்கிய எதிரியான மாதேஷ், சேஷசமுத்திரத்தைச் சேர்ந்த பெ. சின்னத்துரை, மெத்தனால் விற்பனையில் தொடர்புடைய சங்கராபுரம் வட்டம், விரியூர் பெ. ஜோசப்ராஜா, ராமர், விழுப்புரம் மாவட்டம், மரக்காணத்தைச் சேர்ந்த மதன்குமார், கடலூர் மாவட்டம், பண்ருட்டி வட்டம், தம்பிபேட்டையைச் சேர்ந்த ராஜா உள்ளிட்ட 11 பேர் கைது செய்யப்பட்டனர்.

இந்த வழக்கில் மாதேஸுக்கு மெத்தனால் வாங்க ஜிஎஸ்டி ரசீது அளித்து உதவியதாக கடலூர் மாவட்டம், பண்ருட்டியில் சிப்ஸ் கடை நடத்தி வந்த சக்திவேல், மீன் வியாபாரம் செய்து வந்த கண்ணன் மற்றும் வழக்கில் தொடர்புடைய சேலம் மாவட்டம், கருமந்துறை கல்லாநத்தத்தைச் சேர்ந்த சங்கர் ஆகிய மூவரை சிபிசிஐடி போலீஸார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.

இந்த வழக்கில் தற்போது வரை 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சென்னையில் ஒருவர் கைது...

கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராய வியாபாரிகளுக்கு சென்னை, மதுரவாயலைச் சேர்ந்த சிவக்குமார் என்பவர் மெத்தனால் விநியோகித்தது தெரியவந்தது. எம்ஜிஆர் நகரில் உள்ள உறவினர் வீட்டில் சிவக்குமார் பதுங்கியிருப்பதாகக் கிடைத்தத் தகவலின்பேரில், போலீஸார் ஞாயிற்றுக்கிழமை அங்கு சென்று அவரைக் கைது செய்து, சிபிசிஐடி போலீஸாரிடம் ஒப்படைத்தனர்.

விசாரணையில், புழலை அடுத்த வடபெரும்பாக்கத்தில் உள்ள தனியார் ரசாயன தொழிற்சாலையில் சிவக்குமார் பணியாற்றி வந்ததும், கள்ளச் சாராய வியாபாரிகளுக்கு அவர் மெத்தனால், டர்பன்டைன் எண்ணெய் விநியோகம் செய்ததும் தெரியவந்தது.

இது தொடர்பாக, அந்த ரசாயன தொழிற்சாலை உரிமையாளரிடமும் விசாரணை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக போலீஸார் தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com