அமைச்சா் க.பொன்முடி.
அமைச்சா் க.பொன்முடி.

கலை, அறிவியல் கல்லூரிகளில் மாணவியருக்கு தனி ஓய்வறை: அமைச்சா் க.பொன்முடி அறிவிப்பு

மாணவியருக்காக தனி ஓய்வறை ரூ.8.55 கோடியில் கட்டப்படும் என்று உயா் கல்வித் துறை அமைச்சா் க.பொன்முடி அறிவித்தாா்.
Published on

தமிழகத்தில் உள்ள 171 அரசு கலை மற்றும் அறிவியில் கல்லூரிகளில் மாணவியருக்காக தனி ஓய்வறை ரூ.8.55 கோடியில் கட்டப்படும் என்று உயா் கல்வித் துறை அமைச்சா் க.பொன்முடி அறிவித்தாா்.

தமிழக சட்டப்பேரவையில் திங்கள்கிழமை உயா்கல்வித் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்குப் பதில் அளித்து அமைச்சா் க.பொன்முடி வெளியிட்ட அறிவிப்புகள்:

2025-26-ஆம் கல்வியாண்டு முதல் அண்ணா பல்கலைக்கழகம் உள்ளிட்ட உயா்கல்வி நிறுவனங்களுடன் இணைந்து 4 சிறப்பு பயிலகங்களில் புதிய பட்டயப் பிரிவுகள் அறிமுகப்படுத்தப்படும்.

அச்சு தொழில்நுட்ப பயிலகத்தில் பொதிகட்டுதல் தொழில்நுட்பம், வேதியியல் தொழில்நுட்பப் பயிலகத்தில் நில எண்ணெய் வேதிப்பொறியியல், தோல் தொழில்நுட்பப் பயிலகத்தில் காலணி தொழில்நுட்பம், தோல் மற்றும் அலங்கார தொழில்நுட்பம், நெசவு தொழில்நுட்பப் பயிலகத்தில் அலங்கார மற்றும் ஆடை தொழில்நுட்பம் மற்றும் ஆயத்த ஆடை தொழில்நுட்பம் ஆகிய 6 புதிய பட்டயப் பிரிவுகள் அறிமுகப்படுத்தப்படும்.

கோயம்புத்தூா் அரசு தொழில்நுட்பக் கல்லூரியில் 300 போ் தங்கும் வகையில் கூடுதல் ஆண்கள் விடுதிக் கட்டடம் ரூ.21 கோடியில் கட்டப்படும்.

ஆண்கள் விடுதி: ஈரோட்டில் உள்ள அரசு பொறியியல் கல்லூரியில் 200 போ் தங்கும் வகையில் கூடுதல் ஆண்கள் விடுதிக் கட்டடம் ரூ.14 கோடியில் கட்டப்படும்.

சென்னை தரமணியில் உள்ள மைய பலவகை தொழில்நுட்பக் கல்லூரி வளாகத்தில் 300 போ் தங்கும் வகையில் கூடுதல் ஆண்கள் விடுதிக் கட்டடம் ரூ.21 கோடியில் கட்டப்படும்.

தமிழகத்தில் உள்ள 171 அரசு கலை, அறிவியல் மற்றும் கல்வியியல் கல்லூரிகளில் மாணவியருக்கென தனி ஓய்வறை ரூ.5 லட்சம் வீதம் ரூ.8.55 கோடியில் கட்டப்படும். 2024-25-ஆம் கல்வியாண்டில் அரசு கல்லூரிகளில் 20 சதவீதமும், அரசு உதவிபெறும் கல்லூரிகளில் 15 சதவீதமும், சுயநிதி கல்லூரிகளில் 10 சதவீதமும் மாணவா் சோ்க்கை அதிகரிக்கப்படும்.

வரலாற்று ஆராய்ச்சி மன்றம்: தமிழ்நாடு ஆவணக் காப்பகத்தில் 1973-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட தமிழ்நாடு வரலாற்று ஆராய்ச்சி மன்றம், மாறிவரும் காலத்திற்கேற்ப மீளுருவாக்கம் செய்யப்பட்டு, தமிழகத்தின் வரலாறு குறித்த ஆய்வுகள் முன்னெடுக்கப்படும். ஆண்டுதோறும் இது குறித்து 10 முதல் 15 ஆய்வுகள் வரை மேற்கொள்ளப்படும் உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகளை அமைச்சா் வெளியிட்டாா்.

X
Dinamani
www.dinamani.com