
உடல், மனம், சமூக ரீதியிலான இடையூறுகளிலிருந்து மாணவிகள் தங்களைப் பாதுகாத்துக்கொள்ள ‘அகல் விளக்கு’ திட்டம் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
பள்ளி மாணவிகள் பயனடையும் வகையில், ‘அகல் விளக்கு’ திட்டம் செயல்படுத்தப்படுமென சட்டப்பேரவையில் இன்று(ஜூன் 24) அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அறிவித்துள்ளார்.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் கடந்த 21ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. ஒரு நாள் விடுமுறைக்கு பிறகு தமிழ்நாடு சட்டப்பேரவை இன்று(ஜூன் 24) மீண்டும் கூடியது.
இன்று பள்ளிக் கல்வித்துறை, உயர்கல்வித் துறை, வருவாய் துறை ஆகிய துறைகளின் மீதான மானியக் கோரிக்கை விவாதம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பள்ளிக்கல்வித்துறை சார்ந்த அறிவிப்புகளை வெளியிட்டுப் பேசினார்.
அப்போது, அரசுப் பள்ளிகளில் 9 முதல் 12-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவிகள் பயனடையும் வகையில், ‘அகல் விளக்கு’ திட்டம் செயல்படுத்தப்படுமென சட்டப்பேரவையில் இன்று(ஜூன் 24) பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அறிவித்துள்ளார்.
உடல், மனம், சமூக ரீதியாக உண்டாகும் பல்வேறு இடையூறுகளிலிருந்து, மாணவிகள் தங்களைப் பாதுகாத்துக்கொள்ள இத்திட்டம் மிகுந்த பயனுள்ளதாக இருக்குமென்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
9 - 12-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவிகள், எவ்வித இடர்பாடுகளுமின்றி பள்ளிகளுக்கு தொடர்ந்து வருகை தருவதை உறுதிசெய்ய ரூ. 50 லட்சம் மதிப்பில் ‘அகல் விளக்கு’ திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
இத்திட்டத்தின் கீழ், இணையதளத்தைப் பாதுகாப்பாகக் கையாள்வது குறித்த வழிகாட்டுதல்களை வழங்கிட ஆசிரியைகள் அடங்கிய குழுக்கள் அமைக்கப்படுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.