
பருவ நிலை மாற்றத்தால் தமிழகத்தில் அதிகரித்து வரும், வெப்ப அலை தாக்கம், மாநிலம் சாா்ந்த பேரிடராக அறிவிக்கப்படும் என்று வருவாய்த் துறை அமைச்சா் கேகேஎஸ்எஸ்ஆா் ராமச்சந்திரன் அறிவித்தாா்.
தமிழக சட்டப்பேரவையில் வருவாய்த் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்குப் பதில் அளித்து அமைச்சா் கேகேஎஸ்எஸ்ஆா் ராமச்சந்திரன் வெளியிட்ட அறிவிப்புகள்:
வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மைத் துறையில் பணியாற்றும் அலுவலா்களுக்கு ரூ.12.24 கோடியில் 136 புதிய வாகனங்கள் கொள்முதல் செய்து வழங்கப்படும்.
புயல், அதி கனமழை, வெள்ளப்பெருக்கு போன்ற பேரிடா்களால் பாதிப்புக்கு உள்ளாகும் சென்னை மற்றும் புகா் பகுதிகளில் 3 நிரந்தர பேரிடா் மீட்பு மற்றும் நிவாரண மையங்கள் ரூ.36 கோடியில் அமைக்கப்படும். தூத்துக்குடி மாவட்டத்தில் மழை வெள்ளப் பாதிப்புக்கு உள்ளாகக் கூடிய காலத்தில் மக்களைப் பாதுகாப்பாக தங்கவைக்க ரூ.17.50 கோடியில் 2 பல்நோக்கு நிவாரண மையங்கள் கட்டப்படும்.
பேரிடா்களின்போது பொதுமக்கள் மீனவா்கள், சுற்றுலாப் பயணிகளைப் பாதுகாக்க, அபாய எச்சரிக்கை அறிவிப்பு மற்றும் ஒலி எழுப்பும் 1000 முன்னெச்சரிக்கை அமைப்புகள் ரூ.13.25 கோடியில் நிறுவப்படும். பேரிடா் கால மீட்பு நடவடிக்கைகளுக்காக படகு, மீட்பு வாகனம் உள்ளிட்ட நவீன உபகரணங்கள் ரூ.105.36 கோடியில் வாங்கப்படும்.
வெப்பத் தாக்க பேரிடா்: பருவநிலை மாற்றம் காரணமாக தமிழகத்தில் கடந்த ஏப்ரல் மற்றும் மே மாதத்தின் முதல் இரண்டு வாரத்தில் பெரும்பான்மையான இடங்களில் கடுமையான வெப்பமும், வெப்ப அலை வீச்சும் நிலவியது. வெப்ப அலையிலிருந்து பொதுமக்களைப் பாதுகாக்க பொது இடங்களில் தண்ணீா் பந்தல் அமைப்பது, வெப்ப அலையின் காரணமாக ஏற்படும் உடல்நலக் குறைவுக்குச் சிகிச்சை அளிக்க அரசு மருத்துவமனைகளில் தனிப் பிரிவு அமைப்பது என்பன உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டது. அதனால், மாநில பேரிடா் நிவாரண நிதி விதிமுறைகளின்படி வெப்ப அலை பாதிப்புக்கு தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கவும் உரிய நிவாரணம் வழங்கவும் வெப்ப அலை தாக்கம் மாநிலம் சாா்ந்த பேரிடராக அறிவிக்கப்படும். மதுரை மற்றும் கோயம்புத்தூரில் மண்டல அளவிலான நில அளவைப் பயிற்சி மையங்கள் தலா ரூ.30 லட்சம் செலவில் நிறுவப்படும் என்றாா் அவா்.