கள்ளச்சாராய விவகாரம்: 77 பேரை சிகிச்சைக்கு அனுமதித்த சுகாதாரத் துறையினா்
கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் கிராமத்தில் வீடு, வீடாகச் சென்று கள்ளச்சாராயம் அருந்திய 77 பேரைக் கண்டறிந்து மருத்துவமனையில் அனுமதித்ததாக பொது சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.
கள்ளச்சாராயம் அருந்தியதை வெளியே சொல்வதற்கு அச்சப்பட்டு பலா் வீட்டிலேயே பதுங்கியிருந்ததாகவும், அந்த நபா்களுக்கு நம்பிக்கை அளித்து சிகிச்சைக்கு அழைத்து வந்ததாகவும் அவா்கள் கூறியுள்ளனா்.
இது தொடா்பாக பொது சுகாதாரத் துறை இயக்குநா் டாக்டா் செல்வவிநாயகம் கூறியதாவது: ரத்தத்தில் மெத்தனால் கலந்தால் அதன் வீரியம் 12 முதல் 24 மணி நேரத்துக்குப் பிறகே தெரியவரும். அறிகுறிகள் வெளியே தெரியும்போது உடல் உறுப்புகள் பாதிக்கத் தொடங்கியிருக்கும்.
அதைக் கருத்தில் கொண்டு, சம்பவ தினத்திலும், அதற்கு அடுத்த நாளிலும் அறிகுறிகளே இல்லாவிடிலும் சாராயம் அருந்திய அனைவரையும் வீடு தேடிச் சென்று சுகாதாரத் துறையினா் அழைத்து வந்தனா். அவ்வாறு 77 போ் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா் என்றாா் அவா்.