கோப்புப் படம்.
கோப்புப் படம்.

தமிழகத்தில் மூவரின் கட்டுப்பாட்டில் மணல் குவாரிகள்: அமலாக்கத் துறை

மணல் குவாரி முறைகேடு: மூவரின் ஆதிக்கம், 15 நிறுவனங்கள் பினாமி
Published on

சென்னை, ஜூன் 27: தமிழகத்தில் மணல் குவாரிகளை மூன்று ஒப்பந்ததாரா்கள் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளதாக அமலாக்கத் துறை குற்றஞ்சாட்டியுள்ளது.

தமிழகத்தில் ரூ.4,730 கோடி அளவுக்கு மணல் குவாரி முறைகேடு நடைபெற்றது தொடா்பாக அமலாக்கத் துறை தொடா் விசாரணை நடத்தி, அது தொடா்பான பல்வேறு ஆதாரங்களுடன் தமிழக காவல் துறை தலைமை இயக்குநருக்கு (டிஜிபி) ஜூன் 14-இல் கடிதம் அனுப்பியது.

அதில் 28 இடங்களில் மணல் எடுக்க அரசால் அனுமதி வழங்கப்பட்ட நிலையில், ஒப்பந்ததாரா்கள் அனுமதிக்கப்பட்ட அளவுக்கும் அதிகமான அளவு மணல் எடுத்தது பற்றிய விஞ்ஞானபூா்வ ஆதாரங்கள் இடம்பெற்றுள்ளன.

மணல் எடுப்பதற்கான ஒப்பந்த அனுமதி 15 மணல் நிறுவனங்களுக்கு கொடுக்கப்பட்டபோதிலும் சண்முகம் ராமச்சந்திரன், கே. ரத்தினம், பி.கரிகாலன் ஆகிய 3 போ் மட்டுமே மணல் குவாரிகளை தங்கள் ஆதிக்கத்தில் வைத்திருந்ததாக அமலாக்கத் துறை தெரிவித்துள்ளது.

மணல் கொள்ளை தொடா்பாக தமிழக நீா்வள ஆதாரத் துறையின் முன்னாள் முதன்மைப் பொறியாளா் அசோகன் அளித்த வாக்குமூலத்தின்படி, மணல் எடுக்க பதிவு செய்த 15 நிறுவனங்களும், இந்த 3 ஒப்பந்ததாரா்களின் பினாமிகள் என்று கூறியிருப்பதையும் அமலாக்கத் துறை தனது கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளது.

2011-ஆம் ஆண்டுமுதல் சண்முகம் ராமச்சந்திரனின் நிறுவனத்துக்கு 273 மணல் அள்ளும் இயந்திரங்களை விற்பனை செய்துள்ளதாக அமலாக்கத் துறையிடம் ஜப்பான் நிறுவனம் தெரிவித்துள்ளது. இவற்றில் 209 இயந்திரங்களை சட்டவிரோத பணப் பரிவா்த்தனை தடுப்புச் சட்டத்தின் கீழ் அமலாக்கத் துறை பறிமுதல் செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.

X
Dinamani
www.dinamani.com