
நீட் தேர்வு விவகாரத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் நாடகமாடுகிறார் என்று பாஜக மாநிலத் தலைவர் கே.அண்ணாமலை குற்றஞ்சாட்டினார்.
பாஜக சார்பில் கோவை மக்களவைத் தொகுதி ஆய்வுக் கூட்டம் கோவை அருகே உள்ள நீலாம்பூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை, முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
பின்னர், செய்தியாளர்களிடம் கே.அண்ணாமலை கூறியதாவது:
டாஸ்மாக் நிறுவனத்தை சிஏஜி மேற்பார்வை செய்து, அந்நிறுவனத்துக்கு வரக்கூடிய வருமானம் வெளிப்படைத் தன்மையுடன் இல்லை என்று அறிக்கை வழங்கியுள்ளது.
அமைச்சர் துரைமுருகன் சொன்னதை சிலர் நகைச்சுவையாகக் கூறினாலும், நாங்கள் கள்ளக்குறிச்சி சென்றபோது அங்கிருந்தவர்களும் அதையேதான் கூறினர். டாஸ்மாக் மதுபானங்களின் போதை குறைவாக உள்ளது என்பதால்தான் கள்ளச்சாராயம், போதைப்பொருள் நோக்கி செல்கின்றனர். இந்த விவகாரத்தில் தமிழக அரசு தவறாக வேலை செய்கிறது என்பதை அமைச்சர் துரைமுருகன் ஒப்புக்கொண்டுள்ளார்.
கள் விற்பனையை மீண்டும் கொண்டுவர வேண்டும். மது விற்பனையை அரசு நடத்தாமல் தனியார் மூலம் நடத்த வேண்டும்.
நீட் தேர்வைப் பொருத்தவரை வெள்ளை அறிக்கை கொடுக்க மறுப்பதோடு, உச்சநீதிமன்றம் செல்லவும் மறுக்கின்றனர். தரவுகள் கொடுக்க வேண்டும் என்பதற்காக உச்ச நீதிமன்றத்துக்கு செல்லவில்லை. இந்த விவகாரத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் நாடகமாடி வருகிறார்.
நிகழாண்டு நீட் தேர்வை தேசிய தேர்வு முகமை சரியாக நடத்தவில்லை. இதற்கு மத்திய அரசு நடவடிக்கை எடுக்கும். அதேபோல, தமிழக அரசுப் பணியாளர் தேர்வாணையம் சார்பில் நடத்தப்படும் தேர்வுகளிலும் குளறுபடிகள் நடைபெற்றுள்ளன. அதற்காக அந்தத் தேர்வுகளை ரத்து செய்யவில்லை என்றார் அண்ணாமலை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.