6ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் மூலம் வங்கிக்கணக்கு!

பள்ளிகளில் புதிதாக வங்கிக்கணக்கு தொடங்கப்பட்டு நான்குவகையான சான்றிதழ்கள் வழங்கப்படும் என அமைச்சர் உறுதி
கோப்புப் படம்
கோப்புப் படம்

6ஆம் வகுப்பில் சேரும் மாணவர்களுக்கு பள்ளிகள் மூலம் வங்கிக்கணக்கு தொடங்கப்படும் என பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

பள்ளிகளில் புதிதாக வங்கிக்கணக்கு தொடங்கப்பட்டு நான்குவகையான சான்றிதழ்கள் வழங்கப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிட்டுள்ள அறிக்கையில், மாணவர்களின் கற்றலில் எவ்விதத் தொய்வும் ஏற்படாவண்ணம் அவர்களுக்கான உதவித் தொகைகள் மற்றும் ஊக்கத்தொகைகள் அனைத்தும் தங்குதடையின்றி மாணவர்களைச் சென்றடையும் வண்ணம் "நேரடி பயனாளர் பரிவரித்தனை" (DBT) முறை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

இப்பணியினை எளிமைப்படுத்தும் விதத்தில் 2024-2025 கல்வியாண்டில் 6ஆம் வகுப்பில் சேரும் மாணவர்கள் அனைவருக்கும் பள்ளி மூலமாகவே வங்கிக்கணக்குகள் தொடங்கப்படும்.

ஆதார் புதுப்பித்தல் செய்யப்பட்டு ஆதார் பதிவினை வங்கிக்கணக்குடன் இணைக்கும் பணிகளும் மேற்கொள்ளப்படும்.

பெற்றோர்களுக்கும் மாணவர்களுக்கும் சிரமத்தைக் குறைத்திடும் வகையில்,

சாதிச் சான்றிதழ், வருமானச் சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ் மற்றும் முதல் தலைமுறைச் சான்றிதழ் பள்ளிகளிலேயே பெற்றுத்தரப்படும்.

தேவையான ஆவணங்களை பள்ளித் தலைமையாசிரியரிடம் சமர்ப்பிக்கும்போது அதன் விவரங்கள் கல்வி மேலாண்மைத் தகவல் முறைமை (EMIS) தளத்தில் உள்ளீடு செய்யப்பட்டு வருவாய்த்துறையினருக்கு அனுப்பி வைக்கப்படும்.

விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு எமிஸ் (EMIS) தளத்தின் வாயிலாகவே பள்ளிகளுக்கு அனுப்பப்பட்டு உரிய மாணவர்களிடம் சான்றிதழ்கள் வழங்கப்படும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com