“தேர்தல் பத்திரங்கள்: ஸ்டேட் வங்கியின் வாதம் நடுக்கத்தை ஏற்படுத்துகிறது”: அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்

தேர்தல் பத்திரங்கள் தொடர்பான விவரங்களை சமர்ப்பிக்க ஸ்டேட் வங்கி கால அவகாசம் கோரியதற்கு அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் விமர்சனம் தெரிவித்துள்ளார்.
அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்
அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்dinamani online

தேர்தல் நிதிப் பத்திரங்கள் சட்டவிரோதமானது எனக்கூறி தடை விதிக்கக் கோரிய மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம் தேர்தல் பத்திரங்களை தடை செய்வதாக கடந்த பிப்.15ஆம் தேதி உத்தரவிட்டது.

மேலும் தேர்தல் பத்திரங்கள் ஊழலுக்கு வழிவகுக்கும் எனத் தெரிவித்த உச்சநீதிமன்றம் இது தொடர்பான விவரங்களையும் வெளியிட மார்ச் 6ஆம் தேதி வரை அவகாசம் அளித்து ஸ்டேட் வங்கிக்கு உத்தரவு பிறப்பித்தது. அதற்குள் விவரங்களை தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பிக்க வேண்டும் எனவும் ஸ்டேட் வங்கிக்கு உத்தரவிட்டது.

தேர்தல் பத்திரங்கள் தொடர்பான தகவல்களை மார்ச் 13ஆம் தேதிக்குள் தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் வெளியிட வேண்டும் என்று தேர்தல் ஆணையத்துக்கும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இதற்கு மத்தியில் தேர்தல் பத்திரங்கள் குறித்த தகவல்களை தேர்தல் ஆணையத்திடம் வழங்குவதற்கான காலக்கெடுவை ஜுன் 30ஆம் தேதி வரை நீட்டிக்க வேண்டும் என ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ) உச்ச நீதிமன்றத்தில் திங்கள்கிழமை (மார்ச் 4) கோரிக்கை விடுத்தது.

இந்நிலையில் இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் எஸ்பிஐ வங்கியை கடுமையாக விமர்சித்துள்ளார்.

அவர் பேசும்போது, “நான் இருபது ஆண்டுகள் வங்கியில் பணியாற்றியிருக்கிறேன். கேவலமான வாதத்தை எஸ்பிஐ வங்கி வைத்துள்ளது. ஒரு வங்கியாக, அடிப்படையான தரவு பாதுகாப்பைக் கொண்டிருந்தாலே வெறும் 2 நிமிடங்களில் உச்சநீதிமன்றம் கோரிய தகவல்களை வெளியிட்டுவிட முடியும். இந்தியா உலகத்தின் 5வது பெரிய பொருளாதார நாடு எனும் பெருமை பேசும் நிலையில் நாட்டின் பெரிய வங்கியால் இவ்வளவு குறைவான தகவல்களை 3 மாதத்திற்குள் வழங்க முடியவில்லை என்றால் எனக்கு நடுக்கம் ஏற்படுகிறது.

எஸ்பிஐ தெரிவிக்கும் வாதம் கேவலமானது. இது உண்மையாக இருக்க முடியாது. இதைக் கேட்கும்போது நமது வங்கி கட்டமைப்பு இவ்வளவு மோசமானதாக இருக்கிறதா எனும் கேள்வி எழுகிறது.

உச்சநீதிமன்றம் நாளை காலை இந்தத் தகவல்களை வழங்கக் கோரினால் அதை வழங்கக்கூடிய கட்டமைப்பு வங்கியிடம் இருக்க வேண்டும்.

இல்லையெனில் அவர்கள் வங்கித் தொழிலில் இருக்கக் கூடாது” எனத் தெரிவித்தார்.

தேர்தல் நிதிப் பத்திரங்கள் மூலம் பாரதிய ஜனதா கட்சி பெரும்பான்மையாக நிதியைப் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com